சிப்பாங், ஏப்ரல் 28 : மாலத்தீவு அதிபர் டாக்டர் முகமட் முய்சு நான்கு நாள் அதிகாரப்பூர்வப் பயணமாக மலேசியா வந்தடைந்தார்.
ஞாயிற்றுக்கிழமை மாலை 5.31 மணிக்கு கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தை (KLIA) மாலத்தீவு அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகளுடன் முய்சு வந்தடைந்தார்.
2023ஆம் ஆண்டு நவம்பரில் மாலத்தீவு அதிபராக நியமிக்கப்பட்டதிலிருந்து, மலேசியாவிற்கு அவர் மேற்கொள்ளும் முதல் வருகை இதுவாகும்.
இன்று (ஏப்ரல் 28) பெர்டானா புத்ரா வளாகத்தில் மாலத்தீவு அதிபருக்கு அதிகாரப்பூர்வ வரவேற்பு விழா நடைபெறும். அதைத் தொடர்ந்து பிரதமர் உடனான சந்திப்பு நடைபெறும் என விஸ்மா புத்ரா தெரிவித்தது.
இரு தலைவர்களும் மலேசியா-மாலத்தீவு இருதரப்பு உறவுகளை ஆய்வு செய்து, குறிப்பாக வர்த்தகம் மற்றும் முதலீடு, ஹலால் தொழில், கல்வி, சுற்றுலா, இளைஞர்கள் மற்றும் விளையாட்டு ஆகியவற்றில் ஒத்துழைப்பை பற்றி ஆராய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விஜயத்தின் போது, இரு தலைவர்களும் சுற்றுலாத் துறை, விளையாட்டுத் துறை மற்றும் சுகாதாரத் துறை ஆகிய மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட உள்ளனர்.
2023-ஆம் ஆண்டு 82 கோடியே 73 லட்சம் ரிங்கிட்டாக இருந்த இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம், கடந்தாண்டு 4.3 விழுக்காடு உயர்வுக் கண்டு 86 கோடியே 27 லட்சம் ரிங்கிட்டாக பதிவானது.
தெற்காசிய நாடுகளில் மலேசியாவின் ஆறாவது பெரிய வர்த்தக பங்காளியாக மாலத்தீவு உள்ளது.
பெர்னாமா


