ஜெனின், ஏப். 28 - இஸ்ரேலிய இராணுவம் ஜெனின் நகரம் மற்றும் அகதிகள் முகாம்கள் மீது தொடர்ந்து 97 நாட்களாக தாக்குதல்களை நடத்தி வருகிறது.
மேலும் அப்பகுதியில் பேரழிவை ஏற்படுத்தியதோடு வீடுகளை எரித்து அவற்றில் சிலவற்றை இராணுவ சோதனைச் சாவடிகளாக மாற்றியுள்ளதாகப் பாலஸ்தீன செய்தி மற்றும் தகவல் நிறுவனமான வாஃபா தெரிவித்தது.
அல்-சஹ்ரா வட்டாரத்தில் உள்ள 20 குடும்பங்கள் ஞாயிற்றுக்கிழமை தங்கள் வீடுகளை காலி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக ஜெனின் ஊராட்சி மன்றத்தின் மக்கள் தொடர்பு இயக்குநர் பஷீர் மாத்தஹேன் கூறினார்.
பறிக்கப்பட்ட அந்த வீடுகள் இராணுவ நிலைகளாக மாற்றப்பட்டன.
இதுவரை, சுமார் 600 வீடுகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளன. எஞ்சியவை வசிக்கத் தகுதியற்ற அளவிற்கு சேதத்தை சந்தித்துள்ளன என்று அவர் தெரிவித்தார்.
அந்த முகாம் இப்போது நான்கு இரும்பு வாயில்களாலும் மண் மேடுகளாலும் சூழப்பட்டுள்ளது. இது மூடப்பட்ட இராணுவ மண்டலமாக மாற்றப்பட்டுள்ளது. அதே நேரத்தில் நுழைவு மற்றும் வெளியேறும் நடவடிக்கைகள் முழுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளன.
நிவாரண முகாமிலிருந்தும் ஜெனின் நகரத்திலிருந்தும் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ள நிலையில் அகதிகளின் எண்ணிக்கை 22,000 ஐத் தாண்டியுள்ளதாக மாத்தஹேன் தெரிவித்தார்.
ஜெனின் மற்றும் அகதிகள் முகாம் மீதான இஸ்ரேலிய தாக்குதல் தொடங்கியதிலிருந்து இதுவரை 39 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு டஜன் கணக்கானோர் காயமடைந்துள்ளனர். தொடர்ச்சியான தாக்குதல்களில் மேலும் பலர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.


