ஷா ஆலம், ஏப். 28 - சிலாங்கூர் மாநில அரசின் ஏற்பாட்டில் எதிர்வரும் மே 1 ஆம் தேதி ஷா ஆலம் சுதந்திர சதுக்கத்தில் சிலாங்கூர் மெகா உணவு விழா வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது.
2025 சிலாங்கூருக்கு வருகை தாருங்கள் ஆண்டு (டிஎம்எஸ்2025) இயக்கத்தை முன்னிட்டு நான்கு நாட்களுக்கு நடைபெறும் இந்த விழாவில் உணவு கண்காட்சியை முன்னிட்டு மற்றும் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு சுவாரஸ்யமான நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சுற்றுலாத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் தெரிவித்தார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு சிலாங்கூர் அரசு இத்தகைய நிகழ்வை நடத்தியது. ஆனால் அது இடையில் நிறுத்தப்பட்டது. சிலாங்கூர் உணவின் பன்முகத்தன்மையை பொதுமக்கள் அனுபவிப்பதற்காக இப்போது அந்த விழாவை மீண்டும் நடத்துகிறோம் என்று டத்தோ இங் சூயி லிம் கூறினார்.
சிலாங்கூரில் பல்லின மக்களின் பல்வேறு அறுசுவை உணவுகள் இருப்பதால் அவற்றையும் நாங்கள் முன்னிலைப்படுத்துவோம். முடிந்தவரை அதிகமான மக்களை நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று அவர் தெரிவித்தார்.
மாநிலம் முழுவதும் உள்ள கம்போங் பாருவின் அடையாளத்தை எடுத்துக்காட்டும் வகையில் எதிர்வரும் ஆகஸ்டு மாதம் கம்போங் பாரு விழாவை ஏற்பாடு செய்வதன் மூலம் சிலாங்கூருக்கு வருகை தாருங்கள் இயக்கம் மேலும் மேம்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
இந்த நிகழ்விற்கான ஏற்பாடுகளை நாங்கள் செய்து வருவதோடு அந்நோக்கத்திற்காக இரண்டு இடங்களை இலக்காகக் கொண்டுள்ளோம். இது மாநிலத்தின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் கூறுகளை இணைத்து உள்ளூர் சுற்றுலா இடங்களை முன்னிலைப்படுத்தும் ஒரு மெகா விழாவாகவும் இருக்கும் என்று அவர் சொன்னார்.
இந்த ஆண்டு சிலாங்கூருக்கு வருகை தாருங்கள் இயக்கத்தின் வழி எண்பது லட்சம் வருகையாளர்களை ஈர்க்க மாநில அரசு இலக்கு கொண்டுள்ளது.


