ஜோகூர் பாரு, ஏப். 27 - தென் கொரியாவிற்கு சுற்றுலாப் தொகுப்பை ஏற்பாடு செய்வதாகக் கூறி பொதுமக்களை ஏமாற்றியது தொடர்பான விசாரணைக்காகக் 'கிம் ஸ்ரீ' என்று அழைக்கப்படும் சமூக ஊடகப் பிரபலத்தின் முன்னாள் கணவரை ஜோகூர் போலீசார் கைது செய்துள்ளனர்.
சேகு கிம்ச்சி டிரேடிங் நிறுவனத்தின் கணக்கு உரிமையாளரான 41 வயதான அந்த உள்ளூர்வாசி, பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து பணத்தைப் பெற அந்நிறுவனத்தைப் பயன்படுத்தியுள்ளார் என்று ஜோகூர் காவல்துறைத் தலைவர் டத்தோ எம் குமார் கூறினார்.
அந்த ஆடவர் கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி கைது செய்யப்பட்டதாகக் கூறிய அவர், அதே வழக்கு தொடர்பாக மாநிலத்தில் செய்யப்பட்ட எட்டு புகார்கள் தொடர்பான மேல் விசாரணைக்காக அவர் இன்னும் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகச் சொன்னார்.
ஜோகூர் பாரு செலாத்தான், கோத்தா திங்கி, ஸ்ரீ ஆலம், இஸ்கந்தர் புத்ரி, மூவார் மற்றும் குளுவாங்கில் செய்யப்பட்ட எட்டு புகார்கள் தொடர்பாக விசாரணை அறிக்கைகள் திறக்கப்பட்டுள்ளன. அடுத்த நடவடிக்கைக்காக விசாரணை அறிக்கை துணை அரசு வழக்கறிஞரிடம் சமர்ப்பிக்கப்படும் என்றார் அவர்.
மோசடியில் ஈடுபட்டது தொடர்பில் குற்றவியல் சட்டப் பிரிவு 420 இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது. சந்தேக நபர் பல மாநிலங்களிலும் இதேபோன்ற செயல்களில் ஈடுபட்டிருப்பதை ஜோகூர் போலீசார் கண்டறிந்தனர் என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
முன்னதாக, தென் கொரியாவில் வசிக்கும் செல்வாக்கு மிக்க உள்ளூர் நபர் ஒருவருக்குச் சொந்தமான பயண நிறுவனம் செய்த மோசடியில் பலர் பாதிக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் செய்தி வைரலானது. இந்த மோசடியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்பட்ட மொத்த இழப்பு கிட்டத்தட்ட 500,000 வெள்ளியாகும்.


