டோஹா, ஏப். 28 - காஸாவில் புதிய போர் நிறுத்தத்தை அமல்படுத்துவதற்கான முயற்சி முன்னெடுக்கப்பட்டு வருகிறது. எனினும், போரை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பில் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே ஒப்பந்தம் இன்னும் எட்டப்படவில்லை என்றும் கத்தார் பிரதமர் ஹீக் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல் தானி தெரிவித்தார்.
மற்ற சந்திப்புகளுடன் ஒப்பிடும்போது கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற சந்திப்பில் நாங்கள் சிறிது முன்னேற்றத்தைக் கண்டோம். ஆனால், இறுதிக் கேள்விக்கு நாம் ஒரு பதிலைக் கண்டுபிடிக்க வேண்டும். இந்தப் போரை எப்படி முடிவுக்குக் கொண்டு வருவது? அதுதான் முழு பேச்சுவார்த்தைகளின் முக்கிய அம்சம் என்று வெளியுறவு அமைச்சருமான ஷேக் முகமது கூறினார்.
காஸாவில் புதிய போர் நிறுத்தத்தை அமல்படுத்துவதற்கான முயற்சிகளுக்கு மத்தியில் ஷேக் முகமதுவைச் சந்திக்க மொசாட் இயக்குனர் டேவிட் பார்னியா கடந்த வியாழக்கிழமை டோஹா சென்றதாக ஆக்சியோஸ் கடந்த வாரம் செய்தி வெளியிட்டது.
சமீபத்திய நாட்களில் போர்நிறுத்தப் பேச்சுவார்த்தையில் எந்த அளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை ஷேக் முகமது கூறவில்லை. ஆனால் பேச்சுவார்த்தைகளின் இறுதி இலக்கு குறித்து ஹமாஸ் அமைப்பும் இஸ்ரேலும் முரண்படுவதாக அவர் கூறினார்.
இஸ்ரேல் காஸாவில் போரை முடிவுக்குக் கொண்டு வந்தால் எஞ்சியுள்ள அனைத்து இஸ்ரேலிய பிணைக் கைதிகளையும் திருப்பி அனுப்ப போராளிக் குழு தயாராக உள்ளது. எனினும், போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்த தெளிவான நிலைப்பாட்டை வழங்காமல் எஞ்சியுள்ள பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுவிக்க வேண்டும் என்று இஸ்ரேல் வலியுறுத்துகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
கடந்த ஜனவரி மாதம் அமல்படுத்தப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் முறிந்ததைத் தொடர்ந்து மார்ச் 18ஆம் தேதி காஸாவில் இஸ்ரேல் தனது தாக்குதலை மீண்டும் தொடங்கியது. அந்தப் பகுதியில் இன்னும் பிணைக் கைதிகளாக உள்ளவர்களை விடுவிக்கும் வரை தாக்குதல் தொடரும் என்று இஸ்ரேல் கூறியுள்ளது.
பிணைக்கைதிகளில் 24 பேர் இன்னும் உயிருடன் இருப்பதாக நம்பப்படுகிறது.
கடந்த 2023 அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் நடத்திய தாக்குதலில்
1,200 பேர் கொல்லப்பட்டு 251 பேர் கைதிகளாகக் காஸாவிற்கு கொண்டு செல்லப்பட்டதாக இஸ்ரேல் கூறுகிறது.
அதனை தொடர்ந்து காஸா போர் தொடங்கியது. பாலஸ்தீன சுகாதார அதிகாரிகளின் கூற்றுப்படி அந்த பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 51,400 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.


