கங்கார், ஏப். 28 - மலேசியா மீது அமெரிக்கா அறிவித்த பரஸ்பர வரி உயர்வு விவகாரம் தொடர்பாக அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் குறித்து மே 5 ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தில் விளக்கமளிக்கப்படும்.
அமெரிக்காவின் இந்நடவடிக்கையால் நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்படும் தாக்கம் மற்றும் அதனை சமாளிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் விவாதிக்க இக்கூட்டம் வாய்ப்பினை வழங்குகிறது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
நாட்டின் வளர்ச்சிக்காக அனைத்துக் கட்சிகளும் அனைத்து மக்களும் கவனம் செலுத்த வேண்டிய தருணம் இது. இந்த நாட்டின் கெளரவத்தை உயர்த்துங்கள் என்று அவர் குறிப்பிட்டார்.
மலேசியா சிறப்பான நாடு. நாம் ஒன்றுபட்டு நமது பொருளாதாரத்தின் கெளரவத்தை உயர்த்த கடுமையாக உழைக்கும் பட்சத்தில் ஆசியாவின் நாடுகள் மத்தியில் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழும் திறனை நாடு கொண்டுள்ளது என்று அவர் கூறினார்.
நேற்று, இங்குள்ள கோல பெர்லிஸ், டத்தாரான் லோக் 9 இல் நடைபெற்ற பெர்லிஸ் மாநில அளவிலான நோன்புப் பெருநாள் கொண்டாட்ட நிகழ்வில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு கூறினார்.
இந்த நிகழ்வில் பெர்லிஸ் ராஜா துவாங்கு சைட் சிராஜுடின் ஜமாலுல்லாயில், மற்றும் ராஜா பெரம்புவான் துவாங்கு தெங்கு பௌசியா அல்மார்ஹூம் தெங்கு அப்துல் ரஷீத் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்த வரி உயர்வை மலேசியாவும் ஏற்கவில்லை எனக் கூறிய பிரதமர், வர்த்தக நாடு என்ற முறையில் அமெரிக்கா உட்பட எந்த நாடும் தங்களின் ஒருதலைப்பட்ச மதிப்பீட்டின் அடிப்படையில் தன்னிச்சையான விகிதங்களை (வரிகளை) நிர்ணயிக்கக்கூடாது என்றார்.
நாம் உலக வர்த்தக அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் சபையால் கட்டுப்பட்டுள்ளோம். இதுவே பன்முகத்தன்மை என்று அழைக்கப்படுகிறது.
நாங்கள் பல நாடுகளுடன் இணைந்து செயல்படுகிறோம். ஆனால் நாம் யதார்த்தத்தை ஏற்றுக்கொண்டு அதை புத்திசாலித்தனமாகக் கையாள வேண்டும் என்று அவர் கூறினார்.


