கோலாலம்பூர், ஏப். 28 - இங்குள்ள பங்சார், ஜாலான் தெலாவியில் உள்ள ஒரு உணவகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நிகழ்ந்த கைகலப்பு மற்றும் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
அதிகாலை 5.40 மணியளவில் நிகழ்ந்த இந்த மோதலில் உள்ளூர் ஆடவர்களை உள்ளடக்கிய எட்டு முதல் 10 பேர் கொண்ட இரு கும்பல்கள் ஈடுபட்டதாகப் பிரிக்பீல்ட்ஸ் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி கூ மஷாரிமான் கூ மாமுட் கூறினார்.
ஒரு கும்பலைச் சேர்ந்த பெண் ஒருவர் மற்றொரு கும்பலால் சீண்டப்பட்டதைத் தொடர்ந்து சண்டை மூண்டது ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
இந்த மோதலில் உணவு முகப்பிடம், உணவு மேசை, சுவர் அலங்காரங்கள், உபகரணங்கள் சேதமடைந்தது மற்றும் பயத்தில் வாடிக்கையாளர்கள் பணம் செலுத்தாமல் ஓடியது ஆகிய காரணங்களால் தங்களுக்கு 5,000 வெள்ளி இழப்பு ஏற்பட்டதாக உணவக நிர்வாகம் புகார் செய்துள்ளது என்று கூறினார்.
குற்றவியல் சட்டத்தின் 148வது பிரிவு மற்றும் அதே சட்டத்தின் 427வது பிரிவின் கீழ் நடத்தப்படும் விசாரணைக்கு உதவுவதற்காகக் காவல்துறை இதுவரை மூன்று சாட்சிகளிடமிருந்து வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.


