தாப்பா, ஏப். 26- ஆயர் கூனிங் இடைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று சுமூகமாக நடைபெற்றது. மாலை 3.00 மணி நிலவரப்படி 50.18 சதவீத வாக்கு பதிவாகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியது.
பதிவுசெய்யப்பட்ட 31,281 வாக்காளர்கள் இன்று தங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றும் வகையில் 63 வாக்களிப்புத் தடங்களை உள்ளடக்கிய மொத்தம் 19 வாக்குப்பதிவு மையங்கள் காலை 8 மணிக்கு திறக்கப்பட்டன.
தோ தெண்டேவா சக்தி தேசியப் பள்ளியில் உள்ள வாக்குச் சாவடி மட்டும் மாலை 4 மணிக்கு மூடப்பட்டது. மற்ற 18 மையங்கள் மாலை 6 மணிக்கு மூடப்படும்.
பெர்னாமா மேற்கொண்ட ஆய்வில் கடும் வெயிலுக்கு மத்தியிலும் வாக்குப் பதிவு செயல்முறை சீராக நடந்ததைக் காண முடிந்தது.
இத்தொகுதியில் தேசிய முன்னணி சார்பில் டாக்டர் முகமது யுஸ்ரி பக்கிர், பெரிக்கத்தான் சார்பில் முகமது முமைமின் மலேக், மலேசிய சோசலிச கட்சியின் சார்பில் பவானி கேஎஸ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இந்த இடைத் தேர்தலை முன்னிட்டு கடந்த செவ்வாய்க்கிழமை
நடைபெற்ற தொடக்கக்கட்ட வாக்களிப்பில் போலீஸ்காரர்கள் மற்றும் அவர்களின் துணைவியரை உட்படுத்திய தகுதியுள்ள 500 வாக்காளர்களில்
93.4 விழுக்காட்டினர் வாக்களித்தனர்.
இந்த தேர்தல் சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்யும் பணியில் 601
தேர்தல் ஆணையப் பணியாளர்களும் 1,114 போலீசாரும் ஈடுபடுகின்றனர்.
இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான இஸ்ஹாம் ஷாருடின் கடந்த
பிப்ரவரி 22ஆம் தேதி மாரடைப்பு காரணமாகக் காலமானதைத் தொடர்ந்து இத்தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெறுகிறது.


