புத்ராஜெயா, ஏப். 26 - பூச்சோங்கில் உள்ள ஒரு பொழுதுபோக்கு மையத்தில் சிலாங்கூர் குடிநுழைவுத் துறை நேற்று நடத்திய ஒப்ஸ் செலேரா மற்றும் ஓப்ஸ் கெகார் நடவடிக்கையில் 23 ஆவணமற்ற அந்நியக் குடியேறிகள் கைது செய்யப்பட்டனர்.
இந்நடவடிக்கையில் உபசரிப்பு பணியாளர்களாக வேலை செய்த
தாய்லாந்து, வியட்நாம் மற்றும் மொராக்கோவைச் சேர்ந்த மூன்று பெண்களும் மியான்மரைச் சேர்ந்த 16 ஆடவர்கள் மற்றும் வங்காளதேசத்தைச் சேர்ந்த நான்கு பேரும் கைது செய்யப்பட்டதாக சிலாங்கூர் குடிநுழைவுத் துறை இயக்குநர் கைருல் அமினஸ் கமாருடின் தெரிவித்தார்.
இருபத்திரண்டு முதல் 44 வயதுக்குட்பட்ட அவர்கள் அனைவரும் ஆறு மாதங்களுக்கும் மேலாக இங்கு பணிபுரிந்து வருகின்றனர். சோதனையின் போது சிலர் அலமாரிகளில் ஒளிந்து கொண்டு அல்லது வாடிக்கையாளர்களைப் போல நடித்து அதிகாரிகளிடமிருந்து முயன்றனர். ஆனால் அந்த முயற்சி எந்தப் பலனையும் தரவில்லை என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட அனைவரும் முகவர்களின் உதவியுடன் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் மற்றும் புக்கிட் காயு ஹீத்தாம் வழியாக மலேசியாவுக்குள் நுழைந்ததாக நம்பப்படுகிறது என்று கைருல் மேலும் கூறினார்.
மாலை 6 மணி தொடங்கி நபைபெற்ற இச்சோதனையின் போது 37 நபர்களை 18 சிலாங்கூர் குடிநுழைவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.
மேலும் நடவடிக்கைகளின் போது ஒரு மலேசியருக்கு சாட்சிக்கான சம்மன் அனுப்பப்பட்டது. கைது செய்யப்பட்ட அனைவரும் செமினி குடிநுழைவு முகாமுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்,


