கூச்சிங், ஏப். 26- இங்குள்ள பத்து காவா, ஜாலான் ஸ்டீபன் யோங்கில் இன்று காலை தலையில் துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் ஆடவர் ஒருவர் இறந்து கிடந்தார்.
அதிகாலை 5.30 மணிக்கு பத்து காவா காவல் நிலையத்திற்கு வந்த இரண்டு நபர்களிடமிருந்து இந்த சம்பவம் குறித்த தகவல் தனது துறைக்கு கிடைத்ததாக படவான் மாவட்ட காவல்துறைத் தலைவர் சூப்ரிண்டெண்டன் முகமது இர்வான் ஹபீஸ் முகமட் ரட்ஸி கூறினார்.
தங்கள் நண்பர் ஒரு காரில் படுத்த நிலையில் கிடந்ததாகவும் சாலையில் வாகனம் ஓட்டும்போது அவர் சுடப்பட்டிருக்கலாம் என்று தாங்கள் நம்பப்படுவதாகவும் அவ்விருவரும் தங்கள் புகாரில் தெரிவித்ததாக அவர் கூறினார்.
காவல் நிலையத்திற்கு வரும் போது இருவரும் காரில் கிடந்த தங்கள் நண்பரை உடன் கொண்டு வந்தனர். 34 வயதான பாதிக்கப்பட்ட நபர் உயிரிழந்து விட்டதை
படவான் மாவட்ட காவல் தலைமையகத்தின் விசாரணைக் குழுவினரும் மருத்துவ அதிகாரிகளும் மரணத்தை உறுதிப்படுத்தினர்.
அந்த ஆடவரின் தலையில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் இருந்தன என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்ததாக பெரித்தா ஹரியான் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கு குற்றவியல் சட்டத்தின் 302 வது பிரிவின் கீழ் விசாரிக்கப்படுகிறது.


