கோல திரங்கானு, ஏப். 26- ஹருமானிஸ் மாம்பழங்களை இணையம் வாயிலாக வாங்க முற்பட்ட ஆசிரியை ஒருவர் இணைய மோசடிக் கும்பலின் வலையில் சிக்கி தனது சேமிப்புத் தொகையான 9,998.52 வெள்ளியைப் பறிகொடுத்தார்.
பாதிக்கப்பட்ட அந்த 46 வயது பெண் கடந்த புதன்கிழமை ஹருமானிஸ் மாம்பழங்களின் விற்பனை தொடர்பான விளம்பரத்தை சமூக ஊடகங்களில் பார்த்ததாகக் கோல திரங்கானு மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி அஸ்லி முகமட் நூர் கூறினார்.
அந்த விளம்பரத்தால் கவரப்பட்ட பாதிக்கப்பட்டப் பெண் வாட்ஸ்அப் செயலி மூலம் சந்தேக நபரைத் தொடர்பு கொண்ட வேளையில், பழங்களை ஆர்டர் செய்வதற்கான விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்யும்படி அப்பெண் கேட்டுக் கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.
அனைத்து தனிப்பட்ட தகவல்களையும் பூர்த்தி செய்த பிறகு அப்பெண்ணுக்கு கியூஆர் குறியீடு கிடைத்தது. மேலும் அதை தனக்கு அனுப்பும்படி சந்தேக நபர் கேட்டுள்ளார்.
பின்னர் சந்தேக நபர் அந்த பெண்ணை தொலைபேசி அழைப்பு மூலம் தொடர்பு கொண்டார். அப்போது அவரது கைப்பேசி திடீரென செயிலிழந்தது சில நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் இயக்கப்பட்டது என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட பெண் மறுநாள் தனது தபோங் ஹாஜி கணக்கை சோதனையிட்டபோது அதில் இருந்த 9,998.51 சேமிப்பு காணாமல் போனதை அறிந்தார் என அஸ்லி கூறினார்.
தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அப்பெண் கடந்த வியாழக்கிழமை காலை 6.35 மணிக்கு போலீசில் புகார் அளித்ததாகவும் இந்த வழக்கு குற்றவியல் சட்டத்தின் பிரிவு 420 இன் கீழ் விசாரிக்கப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.


