ஷா ஆலம், ஏப்ரல் 26- யுனிஃபை மலேசியா கிண்ண இறுதிப் போட்டி மற்றும் ஆமி சேர்ச் முதல் தனி இசை நிகழ்ச்சியை முன்னிட்டு புக்கிட் ஜாலில் இலகு ரயில் போக்குவரத்து (எல்.ஆர்.டி.) சேவை இன்று நள்ளிரவு 12.30 மணி வரை நீட்டிக்கப்படும்.
இரண்டு நிகழ்வுகளுக்கும் வரும் பயணிகள் மற்றும் பார்வையாளர்களின் வசதியை உறுதி செய்வதற்காக இந்த இரயில் சேவை நீட்டிக்கப்படுவதாக ரெப்பிட் ரெயில் சென்.பெர்ஹாட் நிறுவனம் ஒரு அறிக்கையின் மூலம் தெரிவித்தது.
பயணிகள் தங்கள் இறுதி இலக்கை நோக்கி பயணத்தைத் தொடர அனுமதிக்கும் வகையில் இணைப்பு நிலையங்களிலும் சேவை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அந்நிநிறுவனம் கூறியது.
செளகர்யமான பயணத்திற்கு டச் அண்ட் கோ கார்டைப் பயன்படுத்தும் அதே வேளையில் கார்டில் பண இருப்பு போதுமானதாக இருப்பதை உறுதி செய்யவும் என்று அது முகநூலில் தெரிவித்துள்ளது.
இன்று பிற்பகல் 2.00 மணிக்கு நடைபெறும் ஜோகூர் டாருல் தாக்ஸிம் மற்றும் ஸ்ரீ பகாங் எஃப்சி அணிகளுக்கு இடையிலான யுனிஃபை மலேசியா கிண்ண இறுதிப் போட்டியை முன்னிட்டு புக்கிட் ஜாலில் தேசிய அரங்கை சுற்றியுள்ள பல சாலைகள் மூடப்பட்டு மாற்றுப்பாதையில் போக்குவரத்து திருப்பி விடப்படும் என்று கோலாலம்பூர் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறைத் தலைவர் முன்னதாக
அறிவித்தார்.
போக்குவரத்து சீராக நடைபெறுவதை உறுதி செய்வதற்கும் சாலை பயனர்கள் மற்றும் இளையாட்டு ஆதரவாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் இந்த சாலை மூடல் மற்றும் மாற்றுப்பாதைகள் படிப்படியாக செயல்படுத்தப்படும் என்று ஏசிபி முகமட் சம்சூரி முகமட் இசா சொன்னார்.


