நியூயார்க், ஏப்ரல் 25: இஸ்ரேலிய இராணுவத்தால் மீண்டும் மீண்டும் வெளியேற்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து கடந்த ஒரு மாதத்தில் காஸா பகுதியில் சுமார் 500,000 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக மேற்காசியாவிலுள்ள பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் நிவாரணம் மற்றும் பணி நிறுவனம் நேற்று கூறியது.
அண்மைய இடப்பெயர்ச்சி அலை பாலஸ்தீனர்களின் நடமாட்டத்தை காஸா அசல் பகுதியில் மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவாக கட்டுப்படுத்தியுள்ளது என்று அநிறுவனம் தெரிவித்துள்ளதாக பாலஸ்தீன செய்தி மற்றும் தகவல் நிறுவனமான வாஃபா எக்ஸ் தளத்தில் பகிரப்பட்ட ஒரு அறிக்கையில் குறிப்பிட்டது.
எஞ்சியுள்ள பகுதிகள் "துண்டு துண்டானவை, பாதுகாப்பற்றவை மற்றும் கிட்டத்தட்ட வாழத் தகுதியற்றவை" என்று விவரிக்கப்பட்டுள்ளன.
நெரிசலான தங்குமிடங்களில் உள்ள மோசமான மனிதாபிமான நிலைமைகளை எடுத்துக்காட்டிய அந்த பணி நிறுவனம், அவற்றை ஒரு பேரழிவு என்று விவரித்தது.
தற்போதுள்ள அனைத்து வளங்களும் தீர்ந்துவிட்ட நிலையில் சேவை வழங்குநர்கள் இப்போது செயல்பட சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அது குறிப்பிட்டது.
இஸ்ரேலின் தொடர் தாக்குதல்கள் காஸாவில் மனிதாபிமான நெருக்கடியை அதிகப்படுத்துவதோடு இடம்பெயர்ந்த குடும்பங்கள் மிகுந்த சிரமங்களையும் எதிர்கொள்கின்றன. உணவு, தண்ணீர், சுகாதாரம் போன்ற அடிப்படை சேவைகள் கடுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அந்த நிறுவனம் தெரிவித்தது.


