MEDIA STATEMENT

எம்.ஏ.சி.சி. நடவடிக்கையில் கடந்தாண்டு வெ.28.5 கோடி சொத்துகள் பறிமுதல்

26 ஏப்ரல் 2025, 3:55 AM
எம்.ஏ.சி.சி. நடவடிக்கையில் கடந்தாண்டு வெ.28.5 கோடி சொத்துகள் பறிமுதல்

கோலாலம்பூர், ஏப். 26- ஊழல் குற்றங்களுக்கு  எதிரான நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி.) கடந்த  2024 ஆம் ஆண்டில் 28 கோடியே 50 லட்சம் வெள்ளிக்கும்  அதிகமான சொத்துக்களைக் கைப்பற்றி முடக்கி மற்றும் பறிமுதல் செய்தோடு அபராதமும் விதித்தது.

ஊழல் தடுப்பு ஆணையத்தால்  மேற்கொள்ளப்பட்ட சட்ட அமலாக்க நடவடிக்கை பயனுள்ளதாக இருந்தது என்பதை இது நிரூபித்துள்ளது என்று  எம்.ஏ.சி.சி. தலைமை ஆணையர் டான் ஸ்ரீ அசாம் பாக்கி கூறினார்.

அந்த ஆணையம் விசாரணை செய்வது மட்டுமல்லாமல் துரோகத்தின் மூலம் பறிக்கப்பட்ட  மக்களின் சொத்துகளையும்  மீட்டெடுப்பதாகவும் குறிப்பிட்டார்.

விசாரணை மற்றும்   சொத்துக்களை  மீட்டெடுப்பது எளிதான காரியமல்ல. மக்களுக்கு சமநிலையான தகவல்களை வழங்கவும் நம்பிக்கையை அளிப்பதற்கும் மற்ற நாடுகளுடன் விடாமுயற்சி, அறிவாற்றல், ஒத்துழைப்பை பேணுவது அவசியம் என்றும் அவர் கூறினார்.

இவ்வாண்டின் முதல் காலாண்டில் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் மீதான விசாரணையுடன் தொடர்புடைய ரொக்கம் மற்றும் தங்கக் கட்டிகளை உள்ளடக்கிய மிகப்பெரிய அளவிலான அதாவது 17.7 கோடி வெள்ளி பறிமுதலை எம்.ஏ.சி.சி. பதிவு செய்துள்ளது என்று அவர்  குறிப்பிட்டார்.

நேற்றிரவு இங்கு நடைபெற்ற  எம்.ஏ.சி.சி.யின் ஊடக விருதளிப்பு நிகழ்வில் பேசும்போது அவர் இவ்வாறு  கூறினார். எம்.ஏ.சி.சி. துணை தலைமை ஆணையர் டத்தோ அஸ்மி கமருஸமான் மற்றும் தேசிய செய்தி நிறுவனதாதின் (பெர்னாமா) தலைமை ஆசிரியர் அருள் ராஜூ துரை ராஜ் ஆகியோரும் இந்நிகழ்வில்  கலந்து கொண்டனர்.

பெரிய அளவிலான, உயர்மட்ட மற்றும் பொது நலன் சார்ந்த ஊழல் வழக்குகளில் தமது தரப்பு தொடர்ந்து கவனம் செலுத்தும் என்று அசாம் தெரிவித்தார்.

எம்.ஏ.சி.சி.யின் விசாரணைகள் எப்போதும் சட்டத்தின் அடிப்படையில் சுதந்திரம், வெளிப்படைத்தன்மை மற்றும் தொழில்முறை ஆகிய கொள்கைகளுடன் எந்த அரசியல் தலையீடும் இல்லாமல் நடத்தப்படுகின்றன என்றார் அவர்.

உயர்மட்ட வழக்குகள் தொடர்பான  விசாரணைகள், சம்பந்தப்பட்ட நபர்கள் முன்னாள் உயர்மட்ட தலைவர்கள், மாநில பிரதிநிதிகள் அல்லது பெரிய நிறுவனங்களின் இயக்குநர்கள் என்பதைப் பொருட்படுத்தாமலும் பயமோ பாரபட்சமோ இல்லாமலும் நடத்தப்படுகிறது செயல்படுகிறது என்பதை நிரூபிக்கிறது என்று அவர் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.