பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 26- அண்மையில் டாமன்சாராவில் உள்ள ஒரு பேரங்காடியில் நடைபெற்ற சொங்க்ரான் விழா கொண்டாட்டத்தின் போது பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததற்காக இரண்டு ஆடவர்களுக்கு இங்குள்ள இரண்டு மாஜிஸ்திரேட் நீதிமன்றங்கள் முறையே வெ. 300 மற்றும் வெ.350 அபராதம் விதித்தன.
நேற்றைய விசாரணையின் போது தங்கள் மீதான குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து குளிர் சாதன பராமரிப்பு ஊழியரான சாங் ஜின் வெய் (வயது 27) என்பவருக்கு மாஜிஸ்திரேட் ஷாரில் அனுவார் அகமது முஸ்தபா 300 வெள்ளி அபராதமும் 28 வயதான இங் பூ ஷெங்கிற்கு மாஜிஸ்திரேட் ஃபாரா அசுரா முகமது சஹாட் 350 வெள்ளி அபராதமும் விதித்தனர்.
கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி இரவு 11.00 மணிக்கு அந்த நிகழ்வின் போது பொதுமக்களுக்கு தொந்தரவு ஏற்படுத்தக்கூடிய செயலில் ஈடுபட்டதாக அவ்விருவரும் குற்றம் சாட்டப்பட்டனர்.
இந்தக் குற்றச்சாட்டு குற்றவியல் சட்டத்தின் பிரிவு 268 இன் கீழ் கொண்டுவரப்பட்டது. மேலும் அதே சட்டத்தின் பிரிவு 290 இன் கீழ் தண்டனை வழங்கவும் இப்பிரிவு வகை செய்கிறது. இப்பிரிவுகளின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 400 வெள்ளி அபராதம் விதிக்கப்படும்.
விசாரணையின் போது, இங் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் டத்தோ சூரஜ் சிங், இது தனது கட்சிக்காரரின் முதல் குற்றம் என்பதையும், ஆரம்ப கட்டத்தில் குற்றம் சாட்டப்பட்டவரின் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார் என்பதையும் கருத்தில் கொண்டு குறைந்தபட்ச தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று கோரினார்.
எனது கட்சிக்காரர் இரண்டு நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவருக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளதோடு கண்ணுக்கு மேல் தையல்களும் போடப்பட்டுள்ளன.
மேலும், குற்றம் சாட்டப்பட்டவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதைக் கருத்தில் கொண்டு குறைவான தண்டனையை நான் கோருகிறேன் என்று வழக்கறிஞர் கூறினார்.


