கோலாலம்பூர், ஏப்ரல் 26- கடை ஒன்றிலிருந்து மளிகைப் பொருட்களைத் திருடிய குற்றத்திற்காக இரண்டு குழந்தைகளின் தாயான மாது ஒருவருக்கு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் வழங்கிய இரண்டு மாத சிறைத்தண்டனையை இங்குள்ள உயர் நீதிமன்றம் ஆறு நாட்களாகக் குறைத்தது.
லினி அகமது (வயது 38) என்ற அந்த மாதுவுக்கு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் விதித்த இரண்டு மாத சிறைத்தண்டனையானது அவர் செய்த குற்றத்துடன் ஒப்பிடுகையில் கடுமையானது என்பதன் அடிப்படையில் நீதிபதி கே. முனியாண்டி இந்த தீர்ப்பை வழங்கினார்.
குற்றம் சாட்டப்பட்டவரும் நெருக்கடியின் காரணமாக அந்த பொருள்களைத் திருடியதை ஒப்புக்கொண்டார். மேலும் அவர் அனுபவித்த ஆறு நாள் சிறைத்தண்டனை இக்குற்றத்திற்கு போதுமானது. ஆகவே, குற்றம் சாட்டப்பட்டவர் இன்று விடுவிக்கப்படுகிறார் என்று நீதிபதி கூறினார்.
இந்த வழக்கில் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய உயர் நீதிமன்றம் தனது அதிகார வரம்பைப் பயன்படுத்தியது.
முன்னதாக, திருடுவது ஒரு குற்றம் என்பது தெரியுமா? என்று நீதிபதி முனியாண்டி லினியை நோக்கி பலமுறை கேள்வி எழுப்பினார். மேலும் தன்னை ஆதரிக்க ஒரு வேலையைத் தேடிக் கொள்ளுமாறு அந்தப் பெண்ணுக்கு அவர் அறிவுறுத்தினார்.
குற்றம் சாட்டப்பட்டவர் தனது குற்றத்தை உணர்ந்து மனந்திருத்தி விட்டதாகவும் விடுதலையான பிறகு ஒரு பேரங்காடியிற் உணவு விடுதியில் சமையல்காரராக வேலை செய்யவுள்ளதாகவும் கூறினார்.
தற்போதைய தண்டனை நடைமுறையின்படி லினிக்கு எதிரான தண்டனை மிகையானது என்று துணை அரசு வழக்கறிஞர் இசலினா அப்துல்லா கூறினார். ஏனெனில் பொதுவாக குற்றத்தை ஒப்புக்கொண்ட குற்றவாளிகளுக்கு அபராதம் அல்லது ஒரு வாரம் சிறைத்தண்டனை மட்டுமே விதிக்கப்படும்.
கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி பிரிக்பீல்ட்ஸில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் சிற்றுண்டிகள், தனிப்பட்ட பராமரிப்பு பொருட்கள் உட்பட 30 வகையான பொருட்களைத் திருடியதாக லினி மீது குற்றவியல் சட்டத்தின் பிரிவு 380 இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டது. இப்பிரிவின் கீழ் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம்.


