தாப்பா, ஏப். 25 - ஆயர் கூனிங் சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் நாளை இரவு 9.00 மணியளவில் வெளிவரும் என்று தேர்தல் ஆணையம் (எஸ்.பி ஆர்.) எதிர்பார்க்கிறது.
இருப்பினும், அதிகாரப்பூர்வமற்ற முடிவுகள் முன்னதாகவே பெறப்படலாம் என்று தேர்தல் ஆணையத்தின் செயலாளர் டத்தோ இக்மல்ருடின் இஷாக் கூறினார்.
வாக்களிப்பு மற்றும் வாக்கு எண்ணிக்கை செயல்முறை எந்த இடையூறும் இல்லாமல் சுமூகமாக நடந்தால் குறிப்பிட்ட நேரத்திற்குள் (இரவு 9.00 மணியளவில்) அதிகாரப்பூர்வ முடிவுகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என அவர் குறிப்பிட்டார்
இங்குள்ள டேவான் மெர்டேக்காவில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் தேர்தல் ஆணைய அதிகாரிகளின் முன்னேற்பாடுகளை ஆய்வு செய்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம் இதனைக் கூறினார்.
ஆயர் கூனிங் தொகுதியில் திறக்கப்பட்டுள்ள 19 வாக்குச் சாவடிகளில் போலீஸ்காரர்கள் உட்பட மொத்தம் 601 பணியாளர்கள் பாதுகாப்பு ஈடுபடுவார்கள் என்று அவர் தெரிவித்தார்.
அதே நேரத்தில் பெயர் சரிபார்ப்பை எளிதாக்கவும் வாக்களிப்பு செயல்முறை சீராக நடைபெறவதை உறுதி செய்யவும் அனைத்து 31,281 பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களும் தங்கள் மை கார்டைக் உடன் கொண்டு வருமாறு இக்மல்ருடின் நினைவூட்டினார்.
இத்தொகுதியின் 19 வாக்குச் சாவடிகளில் உள்ள 63 வாக்களிப்புத் தடங்கள்
நாளை காலை 8.00 மணிக்கு திறக்கப்படும். 18 வாக்குச்சாவடிகள் மாலை
6.00 மணிக்கு மூடப்படும் வேளையில் தோ தென்டேவா சக்தி வாக்குச்
சாவடியில் மட்டும் மாலை 4.00 மணியுடன் வாக்களிப்பு நிறுத்தப்படும்.
இத்தொகுதியில் தேசிய முன்னணி சார்பில் டாக்டர் முகமது யுஸ்ரி பக்கிர், பெரிக்கத்தான் சார்பில் முகமது முமைமின் மலேக், மலேசிய சோசலிச கட்சியின் சார்பில் பவானி கேஎஸ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இந்த இடைத் தேர்தலை முன்னிட்டு கடந்த செவ்வாய்க்கிழமை
நடைபெற்ற தொடக்கக்கட்ட வாக்களிப்பில் போலீஸ்காரர்கள் மற்றும் அவர்களின் துணைவியரை உட்படுத்திய தகுதியுள்ள 500 வாக்காளர்களில்
93.4 விழுக்காட்டினர் வாக்களித்தனர்.
இந்த தேர்தல் சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்யும் பணியில் 601
தேர்தல் ஆணையப் பணியாளர்களும் 1,114 போலீசாரும் ஈடுபடுவர்.
இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான இஸ்ஹாம் ஷாருடின் கடந்த
பிப்ரவரி 22ஆம் தேதி மாரடைப்பு காரணமாகக் காலமானதைத் தொடர்ந்து இத்தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெறுகிறது.


