கோலாலம்பூர், ஏப்ரல் 25 - இந்திய நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீரின் பஹல்காமில் நடந்த சமீபத்திய தாக்குதலை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கடுமையாகக் கண்டித்துள்ளார். இது ஒரு திட்டமிட்ட மற்றும் மனிதாபிமானமற்ற தாக்குதல் என்று விளக்கியுள்ளார்.
"அனைத்து மலேசியர்களின் சார்பாக, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய நாங்கள் பிரார்த்திக்கிறோம்," என்று அவர் இன்று ஒரு பேஸ்புக் பதிவில் தெரிவித்தார்.
இந்த துயரமான தருணங்களில், பொறுமை முக்கியம் என்றும், பிரிவினையை ஏற்படுத்தக்கூடிய வன்முறைச் செயல்களைப் பொறுத்துக்கொள்ளக் கூடாது என்றும் அன்வார் கூறினார்.
"மாறாக, இந்த பிராந்தியத்திலும் சர்வதேச அளவிலும் அமைதி, நீதி மற்றும் மனித கண்ணியத்திற்கான உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்துவோம்," என்று அவர் கூறினார்.
தாக்குதல்களுக்குப் பொறுப்பானவர்களைக் கண்டறிந்து வழக்குத் தொடரும் முயற்சிகளை ஆதரிக்குமாறு சர்வதேச சமூகத்தையும் பிரதமர் கேட்டுக் கொண்டார்.
"இதுபோன்ற அட்டூழியங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க, சம்பந்தப்பட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதையும் நாம் உறுதி செய்ய வேண்டும்," என்று அவர் கூறினார்.
செவ்வாய்க்கிழமை காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் மீது அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் குறைந்தது 26 பேர் கொல்லப்பட்டனர், இதனால் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது சவுதி அரேபியா பயணத்தை ரத்து செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
-- பெர்னாமா


