கோலாலம்பூர், ஏப்ரல் 25 - அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்ட வரிகள் தொடர்பான பிரச்சனையை நிவர்த்தி செய்வதில், பேச்சுவார்த்தைகளுக்கான நான்கு முக்கிய பகுதிகளை முன்வைத்து மலேசியா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அண்மையில், அமெரிக்கா, வாஷிங்டன் டி.சி-இல் அதன் வர்த்தகச் செயலாளர் ஹோவர்ட் நுட்னிக் மற்றும் அமெரிக்க வர்த்தக பிரதிநிதியான அதன் தூதர் ஜேமிசன் கிரேர் ஆகியோருடன் நடத்தப்பட்ட சந்திப்புகள், மலேசியாவிற்கும் அந்நாட்டிற்கும் இடையில் ஏற்பட்டுள்ள பரஸ்பர வரி விவகாரத்திற்கான தீர்வாகப் பார்க்கப்படுவதாக முதலீடு, வாணிபம் மற்றும் தொழில்துறை அமைச்சு, MITI அமைச்சர் தெங்கு டத்தோ ஸ்ரீ சஃப்ரூல் தெங்கு அப்துல் அசிஸ் தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பின் போது, மலேசியா நான்கு முக்கியமான அம்சங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கான தனது விருப்பத்தை வெளிப்படையாக வெளிப்படுத்தியது. இதன் மூலம் இரு நாடுகளுக்கும் பரஸ்பர நன்மை பயக்கும் தீர்வை அடைய முடியும் என்று அது நம்பியது.
வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைக்க உதவும் நான்கு முக்கிய அம்சங்கள் வரி அல்லாத தடைகளை நிவர்த்தி செய்தல்; தொழில்நுட்ப பாதுகாப்பு, பாதுகாப்பை வலுப்படுத்துதல் மற்றும் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தங்களுக்கான சாத்தியக்கூறுகளை ஆராய்தல் ஆகியவை ஆகும்.
இரு சந்திப்புகளின் போதும், அமெரிக்கா நீண்ட காலமாக மலேசியாவின் மிக முக்கிய மற்றும் வியூக பொருளாதார பங்காளிகளில் ஒன்றாக இருந்து வருவதாகவும் அது தொடர்ந்து இருக்கும் என்றும் MITI வலியுறுத்தியது.
பல ஆண்டுகளாக, அமெரிக்க நிறுவனங்கள் மலேசியப் பொருளாதாரத்திற்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளதோடு, இரு தரப்பிலும் உள்ள வணிகங்கள் உட்பட தொழிலாளர்களுக்கும் குறிப்பிடத்தக்க நன்மைகளை வழங்கியுள்ளது.


