ஷா ஆலம், ஏப். 25 - கடந்தாண்டு எஸ்.பி.எம். தேர்வில் 6,000க்கும் மேற்பட்ட
மாணவர்கள் அமராததற்கு எஸ்.பி.எம். சான்றிதழ் இல்லாத நிலையிலும்
ஆடம்பர வாழ்க்கை வாழும் சமூக ஊடகப் பிரபலங்கள் ஏற்படுத்திய
தாக்கமும் காரணம் என கூறப்படுகிறது.
மேலும், முன்னுரிமை அளிக்க வேண்டிய கல்வியை பெரும்பாலான
மாணவர்கள் புறக்கணிப்பதற்கு அவர்களின் பெற்றோர்களிடமிருந்து
சரியான வழிகாட்டல்கள் கிடைக்காததும் ஒரு வகையில் காரணமாக
அமைவதாக மலேசிய தேசியப் பல்கலைக்கழகத்தின் உளவியல் நிபுணர்
இணைப் பேராசிரியர் டாக்டர் கத்திஜா அலாவி கூறினார்.
உணமையில் மாணவர்கள் எஸ்.பி.எம். தேர்வை எழுதாததற்கு பல
காரணங்கள் உள்ளன. அவற்றை உள் மற்றும் வெளி காரணங்களாகப்
பிரிக்கலாம். உள் காரணத்தை எடுத்துக் கொண்டால் பெற்றோர்கள் இதற்கு
பொறுப்பானவர்களாக உள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.
தங்கள் வேலையில் அதிக கவனமுடன் இருக்கும் பெற்றோர்கள்
பிள்ளைகளின் வாழ்க்கையைப் பற்றி கவலைப்படுவதில்லை. இதன்
காரணமாக சமூக ஊடகப் பிரபலங்களின் ஆடம்பர வாழ்க்கையால்
கவரப்படும் மாணவர்கள் வாழ்க்கையில் முன்னேற கல்வி முக்கியமல்ல
என்ற முடிவுக்கு வந்து விடுகின்றனர் என்று மீடியா சிலாங்கூருக்கு
அளித்த பேட்டியில் அவர் சொன்னார்.
எஸ்.பி.எம். தேர்வின் முக்கியத்துவம் மீது மாணவர்கள் அலட்சியப்
போக்கை கொண்டிருப்பதற்கு சமூகத்தின் வாழ்வியல் முறையில்
ஏற்பட்டுள்ள மாற்றங்களும் காரணமாக விளங்குகின்றன என்று மலேசிய
தேசிய பல்கலைக்கழகத்தில் உளவியல் மற்றும் மனிதவள மேம்பாட்டுத்
துறையின் முதன்மை விரிவுரையாளருமான கத்திஜா தெரிவித்தார்.
ஆகவே சிறப்பான எதிர்காலத்திற்கு கல்வி மிக முக்கியம் என்ற
எண்ணத்தை மாணவர்கள் மத்தியில் விதைப்பதில் அரசாங்கம் உள்பட
அனைத்து தரப்பினரும் முக்கிய பங்கினை ஆற்ற வேண்டும் என அவர்
கேட்டுக் கொண்டார்.


