ஷா ஆலம், ஏப். 25 - பொது சுகாதாரம் மற்றும் சமூக விளைவுகள் மீது
எழுந்து வரும் கவலைகள் காரணமாக வேப் எனப்படும் மின் சிகிரெட்டு
விற்பனைக்கு மாநில தழுவிய நிலையில் தடை விதிப்பது குறித்து மாநில
அரசு பரிசீலித்து வருகிறது.
இவ்விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக மந்திரி பெசார் அலுவலகம்
மற்றும் மாநில சுகாதாரத் துறையுடன் விரைவில் சந்திப்புக்கு ஏற்பாடு
செய்யப்படும் என்று பொது சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு
உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் கூறினார்.
மேலும் இதில் சம்பந்தப்பட்டுள்ள கூட்டரசு மற்றும் மாநில நிலையிலான
நிறுவனங்கள், துறைகள் ஆகியவற்றோடு ஊராட்சி மன்றங்களும்
இச்சந்திப்பில் பங்கு கொள்ளும் என்று அவர் சொன்னார்.
இந்த மின் சிகிரெட் தடை பரிந்துரையை சட்ட, அமலாக்க மற்றும் சமூக
பொருளாதார ரீதியாக மதிப்பீடு செய்வதற்கு ஏதுவாக உள்நாட்டு வர்த்தக
மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு போன்ற அமலாக்க
அமைப்புக்கும் இச்சந்திப்புக்கு அழைப்பு விடுக்கப்படும் என்று அவர்
தெரிவித்தார்.
இவ்விகாரத்தை அரசாங்கம் கடுமையாக கருதுகிறது. எந்த முடிவையும்
எடுப்பதற்கு முன்னர் இந்த தொழிலில் சம்பந்தப்பட்டவர்களின் கருத்தும்
கவனத்தில் கொள்ளப்படும் என்றார் அவர்.
பொது சுகாதாரத்திற்கு ஏற்படும் பாதிப்பையும் அமலாக்கத்தில் காணப்படும்
சிரமங்களையும் கருத்தில் கொண்டு மின் சிகிரெட் பயன்பாட்டிற்கு எதிராக
கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தேசிய போலீஸ் படைத்
துணைத் தலைவர் டத்தோஸ்ரீ ஆயோப் கான் மைடின் பிச்சை
வலியுறுத்தியதன் அடிப்படையில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது
என்று அவர் குறிப்பிட்டார்.
துணை ஐ.ஜி.பி.யின் கருத்தை பிரதிபலிக்கும் வகையில், இவ்விவகாரம்
தொடர்பில் ஒழுங்கு முறைகளை உருவாக் மாநில அரசு தயாராக
உள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியும் கருத்து
தெரிவித்திருந்ததை ஜமாலியா சுட்டிக்காட்டினார்.


