தாப்பா, ஏப். 25 - ஆயர் கூனிங் தொகுதி இடைத் தேர்தலுக்கான 14 நாள்
பிரசார காலம் இன்றுடன் முடிவடையும் நிலையில் அத்தொகுதியைச்
சேர்ந்த 31,315 பதிவு பெற்ற வாக்காளர்கள் நாளை தங்கள் ஜனநாயகக்
கடமையை நிறைவேற்றவுள்ளனர்.
இத்தொகுதியின் 19 வாக்குச் சாவடிகளில் உள்ள 63 வாக்களிப்புத் தடங்கள்
நாளை காலை 8.00 மணிக்கு திறக்கப்படும். 18 வாக்குச்சாவடிகள் மாலை
6.00 மணிக்கு மூடப்படும் வேளையில் தோ தென்டேவா சக்தி வாக்குச்
சாவடியில் மட்டும் மாலை 4.00 மணியுடன் வாக்களிப்பு நிறுத்தப்படும்.
வாக்குகளை மொத்தமாக எண்ணும் இங்குள்ள டேவான் மெர்டேக்காவில்
நடைபெறும்.
ஆயர் கூனிங் தொகுதியில் நாளை காலை வானம் தெளிவாக இருக்கும்
வேளையில் மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று
மலேசிய வானிலை ஆய்வுத் துறை கணித்துள்ளது.
இத்தொகுதியில் தேசிய முன்னணி சார்பில் டாக்டர் முகமது யுஸ்ரி
பக்கிர், பெரிக்கத்தான் சார்பில் முகமது முமைமின் மலேக், மலேசிய
சோசலிச கட்சியின் சார்பில் பவானி கேஎஸ் ஆகியோர்
போட்டியிடுகின்றனர்.
இந்த இடைத் தேர்தலை முன்னிட்டு கடந்த செவ்வாய்க்கிழமை
நடைபெற்ற தொடக்கக்கட்ட வாக்களிப்பில் போலீஸ்காரர்கள் மற்றும்
அவர்களின் துணைவியரை உட்படுத்திய தகுதியுள்ள 500 வாக்காளர்களில்
93.4 விழுக்காட்டினர் வாக்களித்தனர்.
இந்த தேர்தல் சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்யும் பணியில் 601
தேர்தல் ஆணையப் பணியாளர்களும் 1,114 போலீசாரும் ஈடுபடுவர்.
இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான இஸ்ஹாம் ஷாருடின் கடந்த
பிப்ரவரி 22ஆம் தேதி மாரடைப்பு காரணமாகக் காலமானதைத் தொடர்ந்து
இத்தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெறுகிறது.


