ஷா ஆலம். ஏப். 25 - அடுத்த ஐந்தாண்டுகளில் இலவச டியூஷன் திட்டத்தின்
வழி நான்காம் மற்றும் ஐந்தாம் படிவங்களில் பயிலும் 200,000 மாணவர்கள்
பயனடைவதை உறுதி செய்ய மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு
கூடுதல் கல்வி வாய்ப்புகளை வழங்கும் நோக்கிலான சிலாங்கூர் மக்கள்
டியூஷன் திட்டத்தில் (பி.டி.ஆர்.எஸ்.) இதுவரை 130,000 மாணவர்கள்
பயன்பெற்றுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
இந்த திட்டத்தை மேம்படுத்தும் தொடர்ச்சியான நடவடிக்கையின் ஒரு
பகுதியாக அடுத்த ஐந்தாண்டுகளில் மாணவர்களின் எண்ணிக்கையை
200,000 ஆக உயர்த்துவதில் மாநில அரசு முனைப்பு காட்டி வருகிறது
என்று அவர் சொன்னார்.
நேற்று இங்குள்ள மாநில கல்வி இலாகாவில் நடைபெற்ற எஸ்.பி.எம்.
தேர்வு முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் கூட்டத்தில் அவர் இதனைத்
தெரிவித்தார்.
அண்மைய காலமாக எஸ்.பி.எம். தேர்வு முடிவுகளில் காணப்படும்
மேம்பாடுகளைக் கருத்தில் கொண்டு பி.டி.ஆர்.எஸ். திட்டங்களில்
அறிவியல் சார்ந்த பாடங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு மாநில
அரசு திட்டமிட்டுள்ளதாகக் கல்வித் துறைக்கான ஆட்சிக்குழு
உறுப்பினருமான அவர் சொன்னார்.
கடந்த 2024 ஆம் ஆண்டு எஸ்.பி.எம். தேர்வில் அறிவியல் தொழில்நுட்பம்,
பொறியியல், கணிதம் உள்ளிட்ட பாலங்களில் சராசரி மொத்த
மதிப்பெண்களின் அளவு உயர்வு கண்டுள்ளதால் உயிரியல், வேதியல்,
இயற்பியல் போன்ற பாடங்களை இந்த திட்டத்தில் இணைக்கவிருக்கிறோம் என்றார் அவர்.
கல்வியில் சற்று மந்தமாகக் காணப்படும் மாணவர்களை இலக்காக
கொண்ட இந்த பி.டி.ஆர்.எஸ். திட்டத்தின் கீழ் தற்போது அடிப்படை
பாடங்களான மலாய், ஆங்கிலம், கணிதம், அறிவியல், வரலாறு, கூடுதல்
கணிதம் ஆகிய பாடங்கள் போதிக்கப்படுகின்றன. சம்பந்தப்பட்ட
மாணவர்களுக்கான பாட வழிகாட்டிகள் மற்றும் ஆசிரியர்களுக்கான
சம்பளத்தை மாநில அரசு வழங்குவதோடு மாணவர்களுக்கு மதிய
உணவும் வழங்கப்படுகிறது.


