கோலாலம்பூர், ஏப் 25 - கூட்டு நோய்களால் பாதிக்கப்பட்ட மூத்த குடிமக்களுக்கு இலவச இன்புளூயன்ஸா தடுப்பூசிகளைப் வழங்குவதற்கு ஏதுவாக 57,093 வருகைக்கான முன்பதிவு வாய்ப்புகளை சுகாதார அமைச்சு வழங்குகிறது.
மூத்த குடிமக்களுக்கான இன்புளூயன்ஸா நோய்த் தடுப்பு திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் இந்த இயக்கம் வரும் ஆகஸ்ட் இறுதி வரை நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட 649 சுகாதார மையங்களில் செயல்படுத்தப்படுகிறது.
நாடு முழுவதும் உள்ள அரசு சுகாதார மையங்களுக்கு வழங்கப்பட்ட தடுப்பூசி அளவுகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் இவ்வாண்டு ஏப்ரல் 20ஆம் தேதி வரை அதிக நோய் ஆபத்துள்ள மூத்த குடிமக்களில் 59.47 சதவீதம் பேர் இன்புளூயன்ஸா தடுப்பூசிகளைப் பெற்றுள்ளதாக அமைச்சு நேற்று ஓர் அறிக்கையில் தெரிவித்தது.
தடுப்பூசி பெறுவதற்கு வழங்கப்பட்ட அனைத்து இடங்களும் நிரப்பப்படுவதற்கு முன்பு தகுதியுள்ள மூத்த குடிமக்கள் தங்கள் வருகைக்கு உடனடியாக முன்பதிவு செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இந்த தடுப்பூசி, உபகரணங்கள் மற்றும் தொடர்புடைய சுகாதார சேவைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.
மைசெஜாத்ரா செயலி மூலம் சந்திப்புக்கு முன்பதிவு செய்யலாம் அல்லது அருகிலுள்ள மாவட்ட சுகாதார அலுவலகம், சுகாதார அமைச்சின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் அல்லது சமூக ஊடகப் பக்கங்களைப் பார்வையிடலாம். மேலும் தகவலுக்கு எந்தவொரு சுகாதார மருத்துவமனைக்கும் செல்லலாம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


