ஷா ஆலம், ஏப். 25 - கடந்த 2015ஆம் ஆண்டு முதல் இவ்வாண்டு மார்ச்
மாதம் வரையிலான காலக்கட்டத்தில் மாநிலத்திலுள்ள 61,000
தொழில்முனைவோருக்கு யாயாசான் ஹிஜ்ரா சிலாங்கூர் வாயிலாக 100
கோடி வெள்ளி வரை வர்த்தகக் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
அந்த தொகையில் 12 கோடியே 50 ஆயிரம் வெள்ளி ஷா ஆலம் மற்றும்
பெட்டாலிங் ஜெயா வட்டாரத்திலுள்ள தொழில்முனைவோரின் வர்த்தக
விரிவாக்கத்திற்கு வழங்கப்பட்டது என்று தொழில்முனைவோர்
மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் நஜ்வான் ஹலிமி
கூறினார்.
ஹிஜ்ரா சிலாங்கூர் தொடங்கப்பட்டது முதல் 61,000 தொழில்முனைவோருக்கு 92,000 வர்த்தக கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன. கடனுதவியின் மதிப்பு 86 கோடி வெள்ளியைத்
தாண்டி ஏறக்குறைய 100 கோடி வெள்ளியை எட்டி விட்டது என்று அவர்
சொன்னார்.
தொடர்ச்சியான பொருளாதார மேம்பாட்டை உறுதி செய்வதற்கு ஏதுவாக
பல்வேறு முன்னெடுப்புகளின் வாயிலாக நடுத்தர வர்க்கத்தினரை தரம்
உயர்த்தும் நிலைப்பாட்டை மாநில அரசு கொண்டுள்ளது என அவர்
குறிப்பிட்டார்.
நேற்று இங்கு நடைபெற்ற ஹிஜ்ரா சிலாங்கூர் தொழில்முனைவோருடனான நோன்பு பெருநாள் உபசரிப்பில் உரையாற்றிய போது அவர் இதனைக் கூறினார். இந்நிகழ்வில் ஹிஜ்ரா சிலாங்கூர் தலைமைச் செயல்முறை அதிகார் டத்தோ மேரியா ஹம்சா,
ஷா ஆலம் நாடாளுமன்ற உறுப்பினர் அஸ்லி யூசுப் உள்ளிட்டோர் கலந்து
கொண்டனர்.
ஹிஜ்ரா சிலாங்கூர் அறவாரியத்தில் கடன் பெற்ற தொழில்முனைவோர்
உரிய காலத்தில் கடனைத் திரும்பச் செலுத்துவதன் மூலம் தங்களின்
நாணயத்தை நிலை நிறுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
கடனைத் திரும்பச் செலுத்துவோரின் எண்ணிக்கை கடந்தாண்டு முதல் 97
விழுக்காடாக அதிகரித்துள்ளது. கடனைத் துரத்திப் பிடுங்குவதற்கு ஹிஜ்ரா
சிலாங்கூர் ஆலோங் (வட்டி முதலைகள்) கிடையாது. மாறாக, கடனைத்
திரும்பச் செலுத்துவதற்கு ஏதுவாக மறுஅட்டவணையிடல் மூலம் வாய்ப்பு
வழங்கும் என்றார் அவர்.


