புத்ராஜெயா, ஏப்ரல் 25 - 2024 எஸ்.பி.எம் தேர்வு எழுதாத 6,246 பேரில் 57.8 சதவீதம் பேர் பணிச்சூழலை முக்கியக் காரணமாகக் குறிப்பிட்டுள்ளனர்.
குடும்பப் பொருளாதாரம்,, வாழ்க்கை முறை மற்றும் பிற காரணங்களால் அவர்கள் பணிபுரிவதாக கல்வி இயக்குநர் ஜெனரல் டத்தோ அஸ்மான் அட்னான் கூறினார்.
கல்வி அமைச்சகத்தின் ஆராய்ச்சியின் அடிப்படையில், மாணவர்கள் தேர்வுக்கு வராததற்குக் குடும்பம் தொடர்பான பிரச்சனைகளும் காரணமாக அமையும். அவை 35.5 சதவீதமாகவும், உடல்நலப் பிரச்சனைகள் 4.7 சதவீதமாகவும் இருந்தன, மீதமுள்ளவை பிற காரணிகளாகும் என்று அவர் கூறினார்.
"2023 ஆம் ஆண்டில் தேர்வில் கலந்து கொள்ளாத 8,676 பேருடன் ஒப்பிடும்போது, 2024ஆம் ஆண்டு (6,246) 2,430 குறைவாக உள்ளதை காட்டுகிறது, இது கல்வி அமைச்சினால் செயல்படுத்தப்பட்ட பல்வேறு முயற்சிகள் மற்றும் தலையீடுகளின் செயல்திறனைக் காட்டுகிறது" என்று அவர் இன்று 2024 எஸ்.பி.எம் முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
மாணவர்கள் வருகை 100 சதவீதத்தை எட்டுவதை உறுதி செய்வதற்கான தலையீடுகளை மேற்கொள்வதில் தனது தரப்பு தொடர்ந்து உறுதியாக இருக்கும் என்று அஸ்மான் கூறினார்.
"கடந்த மூன்று ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள போக்கைப் பார்த்தால், எஸ்.பி.எம் தேர்வில் கலந்து கொள்ளாதவர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அளவு குறைந்திருப்பதைக் காண்கிறோம். இது ஒரு நல்ல அறிகுறியாகும். மேலும், இதை பூஜ்ஜியமாகக் குறைக்க எங்கள் முயற்சிகளை இரட்டிப்பாக்குவோம்," என்று அவர் கூறினார்.


