சிரம்பான், ஏப்ரல் 25 - கடந்த ஏப்ரல் பத்தாம் தேதி பதின்ம வயது பெண் ஒருவரை கடத்தியதாக தங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை இரு பெண்கள் உட்பட ஐவர் சிரம்பான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மறுத்துள்ளனர்.
நீதிபதி டத்தின் சுரிதா புடின் முன்னிலையில் அக்குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டப் பின்னர், அலுவலகப் பணியாளரான 31 வயதுடைய டி.சஸ்வினா, காப்புறுதி பணியாளராகிய 23 வயதுடைய ஃபரின் முஹமட் அரிஃப்பின் மற்றும் வேலையில்லாத 21 வயது பி.கிஷோன்குமார், 32 வயது டி போஹராஜ் மற்றும் 23 வயதுடைய பி.சிவஷீனா ஆகியோர் அவ்வாறு கூறினர்.
இரத்த உறவுகளான இவர்கள் அனைவரும், ஏப்ரல் 10 ஆம் தேதி மாலை சுமார் 5.45 மணியளவில் இங்குள்ள சிரம்பான் 2, அப்டவுன் அவென்யூவில் உள்ள ஒரு சிகை அலங்கார நிலையம் முன், RM2 மில்லியன் கப்பம் கோரி பதின்ம வயது பெண் ஒருவரை, கூட்டாகக் கடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஏப்ரல் பத்தாம் தேதி மாலை மணி 5.45-க்கு, சிரம்பான் 2, Uptown Avenue-இல் 20 லட்சம் ரிங்கிட் பிணைப்பணம் கோரும் நோக்கத்தில் அப்பெண்ணைக் கடத்தியக் குற்றச்சாட்டை அவர்கள் எதிர்நோக்கியிருக்கின்றனர்.
1961-ஆம் ஆண்டு கடத்தல் சட்டம் செக்ஷன் 3 (1)-இன் கீழ் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில், குறைந்தபட்சம் 30 ஆண்டுகள் சிறை அல்லது 40 ஆண்டுகளுக்கும் மேற்போகாத சிறை தண்டனையோடு பிரம்படி விதிக்க வகைச் செய்யும் குற்றவியல் சட்டம் செக்ஷன் 34-உடன் வாசிக்கப்பட்டது.
வழக்கை துணை அரசு வழக்கறிஞர் நோராசிஹா அஸ்முனி நடத்தினார், வழக்கறிஞர் டி ஹர்பால் சிங் குற்றம் சாட்டப்பட்ட ஐவருக்கு சார்பாக ஆஜரானார்.
இவ்வழக்கின் மறு செவிமடுப்பு மே 14-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பெர்னாமா


