புத்ராஜெயா, ஏப். 25 - கோத்தா டாமன்சாராவிலுள்ள பொழுது போக்கு
மையம் ஒன்றில் சிலாங்கூர் மாநில குடிநுழைவுத் துறை நேற்று
முன்தினம் இரவு மேற்கொண்ட ஓப் கெகார் அதிரடிச் சோதனையில்
குடிநுழைவுத் தொடர்பான பல்வேறு குற்றங்களுக்காக 32 அந்நிய நாட்டினர்
கைது செய்யப்பட்டனர்.
இந்த சோதனையில் வாடிகையாளர் உபசரிப்பு பணியாளர்களாக வேலை
செய்து வந்த தாய்லாந்து மற்றும் லாவோசைச் சேர்ந்த 29 பெண்களும்
மூன்று வங்காளதேச ஆடவர்களும் கைது செய்யப்பட்டதாக சிலாங்கூர்
மாநில குடிநுழைவுத் துறையின் இயக்குநர் கைருள் அமினுஸ் கமாருடின்
கூறினார்.
இருபத்தொன்று முதல் 40 வயது வரையிலான அந்த வெளிநாட்டினர்
அனைவரும் கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக வேலை செய்து
வந்துள்ளனர். இந்த சோதனையின் போது தப்பியோட முயன்ற
வங்காளதேச ஆடவர்கள் வெற்றிகரமாக மடக்கிப் பிடிக்கப்பட்டனர் என்று
அவர்கள் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
மொத்தம் 21 அதிகாரிகளுடன் இரவு 8.00 மணி தொடங்கி
மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில் 44 அந்நிய நாட்டினர்
சோதனையிடப்பட்டனர் என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த சோதனையின் போது ஏழு உள்நாட்டினருக்கு சாட்சிக்கான
சம்மன்களும் வழங்கப்பட்டன என்று அவர் மேலும் சொன்னார்.
கைது செய்யப்பட்ட அனைத்து வெளிநாட்டினரும் ஏஜெண்டுகளால்
வழிநடத்தப்பட்டுள்ளனர். நாட்டில் தங்கியிருக்கும் காலத்தில் அவர்களுக்கு
தங்குமிடம் உள்ளிட்ட வசதிகளை அவர்கள் ஏற்படுத்தித் தந்துள்ளனர்
என்றார் அவர்.


