புத்ராஜெயா, ஏப். 24 - இன்று விநியோகிக்கப்பட்ட மலேசிய கல்விச் சான்றிதழ் (எஸ்.பி.எம்.) தேர்வு முடிவுகள் மீதான மதிப்பாய்வு அறிக்கையில் ஜாலோர் கெமிலாங் எனப்படும் நாட்டின் தேசியக் கொடி தவறாகக் காட்டப்பட்டது குறித்து கல்வி அமைச்சு விரிவான விசாரணையை நடத்தி வருகிறது.
இதில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எதிராக கடுமையான மற்றும் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வி அமைச்சு இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தது.
இந்த அலட்சியப் போக்கை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனென்றால் ஜாலோர் கெமிலாங் என்பது நாட்டின் மகத்துவம் மற்றும் இறையாண்மையின் சின்னமாகும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சும் இந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டு அச்சிடப்பட்ட மதிப்பாய்வு அறிக்கையை திருப்பப் பெற உத்தரவிட்டது, மேலும் அதில் உடனடித் திருத்தங்கள் செய்யப்பட்டு வருகின்றன.
அந்த அறிக்கையின் 14 மற்றும் 15 ஆம் பக்கங்களில் இடம் பெற்றுள்ள செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) மூலம் உருவாக்கப்பட்ட பல படங்கள் ஜாலோர் கெமிலாங்கை முழுமையற்றவையாகச் சித்தரிக்கின்றன.


