(ஆர்.ராஜா)
ஷா ஆலம், ஏப். 24 - கன மழையின் காரணமாக ஏற்பட்ட திடீர்
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களைக் கோத்தா கெமுனிங்
சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன் நேரில் சந்தித்து ஆறுதல்
கூறினார்.
இங்குள்ள டேசா கெமுனிங், தாமான் ஸ்ரீ மூடா உள்ளிட்ட பகுதியைச்
சேர்ந்த பாதிக்கப்பட்ட மக்களுடனான இச்சந்திப்பின் போது உணவுப்
பொட்டலங்களை அவர்களுக்கு வழங்கியதோடு வெள்ளத்தை தடுப்பதற்கு
மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் எடுத்துரைத்தார்.
வெள்ளம் காரணமாக மக்கள் படும் சிரமங்களை நாங்கள்
உணர்ந்துள்ளோம். வெள்ளத்தை தடுப்பதற்கான திட்டங்கள்
முன்னெடுக்கப்படுகின்றன. மக்களுடனான இத்தகையச் சந்திப்புகளின்
மூலம் அவர்களின் குறைகளை நேரில் கேட்டறிவதற்கும் மாநில அரசின்
திட்டங்கள் குறித்த தகவல்களை அவர்களிடம் நேரில் சேர்ப்பிப்பதற்கும்
வாய்ப்பு கிட்டியுள்ளது என்றார் அவர்.
அண்மைய காலமாகக் கோத்தா கெமுனிங் தொகுதியிலுள்ள தாமான் ஸ்ரீ
மூடா, புக்கிட் கெமுனிங், தாமான் டேசா கெமுனிங், புக்கிட் லஞ்சோங்
உள்ளிட்ட பகுதிகள் அடிக்கடி வெள்ளப் பிரச்சனையை எதிர்நோக்கி
வருகின்றன.
இப்பகுதி மக்கள் வெள்ளத்தை எதிர்நோக்குவது இம்மாதத்தில் இது
இரண்டாவது முறையாகும். கடந்த 11ஆம் தேதி பெய்த கனமழையின்
போது இப்பகுதிகளில் சுமார் இரண்டு அடி வரை வெள்ளம் ஏற்பட்டது.
இந்த வெள்ளப் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை
முன்னெடுக்கும்படி பிரகாஷ் மாநில அரசை குறிப்பாக மந்திரி புசார்
டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
மந்திரி புசாரின் உத்தரவின் அடிப்படையில் அவரது அரசியல் செயலாளர்
சைபுடின் ஷாபி அகமது கடந்த திங்கள்கிழமை வடிகால் நீர்பாசனத் துறை,
ஷா ஆலம் மாநகர் மன்றம் உள்ளிட்டத் தரப்பினருடன் ஸ்ரீ மூடாவில்
வெள்ளத் தடுப்புத் திட்டங்களின் அமலாக்கம் குறித்து விவாதித்தார்.
அதே சமயம் எதிர்வரும் மே அல்லது ஜூன் மாதம் தொடங்கவுள்ள வெள்ளத்
தடுப்புத் திட்டத்தின் அமலாக்கத்தைக் கண்காணிப்பதற்காகக் குடியிருப்பாளர்
பிரதிநிதிகள், ஷா ஆலம் மாநகர் மன்றம் மற்றும் வடிகால் நீர்பாசனத்
துறை அதிகாரிகளை உள்ளடக்கிய கண்காணிப்பு குழு ஒன்று
அமைக்கப்படும் என்று பிரகாஷ் அறிவித்தார்.


