கோத்தா பாரு, ஏப். 24 - கட்டுப்பாட்டை இழந்த நான்கு சக்கர இயக்க
வாகனம் ஆற்றில் விழுந்ததில் அதில் பயணம் செய்த பயணி ஒருவர்
உயிரிழந்தார். இச்சம்பவம் குவா மூசாங்-லோஜிங் சாலையின் 80வது
கிலோ மீட்டரில் நேற்று நிகழ்ந்தது.
இந்த விபத்து குறித்து லோஜிங் போலீஸ் சாவடியிலிருந்து நேற்று மாலை
4.40 மணியளவில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக குவா மூசாங்
மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் சிக் சூன ஃபூ கூறினார்.
நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்தில் 26 வயது
ஆடவர் ஓட்டிச் சென்ற வாகனம் சம்பந்தப்பட்டது தொடக்கக் கட்ட
விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளதாக இன்று வெளியிட்ட
அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்தார்.
புளுவேலியிலிருந்து குவா மூசாங் நோக்கி சென்று கொண்டிருந்த அந்த
வாகனம் கடும் மழை காரணமாக வெள்ளம் சூழந்த பகுதியைக் கடக்கும்
போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக அவர் சொன்னார்.
அப்பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த அந்த வாகனம் பள்ளத்தில் விழுந்து
அருகிலுள்ள ஆற்றின் பக்கமாக இழுத்துச் செல்லப்பட்டது என அவர்
மேலும் கூறினார்.
இந்த விபத்தில் உயிரிழந்தவரின் உடல் பரிசோதனைக்காக குவா மூசாங்
மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டதாகக் கூறிய அவர்,
இவ்விபத்து தொடர்பில் 1987ஆம் ஆண்டு சாலை போக்குவரத்துச்
சட்டத்தின் 41(1)வது பிரிவின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது
என்றார்.


