புத்ராஜெயா, ஏப்ரல் 24 - துருக்கியின் தலைநகர் இஸ்தான்புல்லில் நேற்று ஏற்பட்ட 6.2 ரிக்டர் அளவிலான பூகம்பத்தில் மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்று வெளியுறவு அமைச்சு கூறியது.
இஸ்தான்புல் நகரின் சிலிவ்ரி மாவட்டத்திற்கு அருகிலுள்ள மர்மாரா கடலில் உள்ளூர் நேரப்படி மதியம் 12.49 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து தாங்கள் அங்குள்ள நிலைமையை அணுக்கமாகக் கண்காணித்து வருவதாக விஸ்மா புத்ரா எனப்படும் வெளியுறவு அமைச்சு இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தது.
இஸ்தான்புல்லில் உள்ள மலேசிய துணைத் தூதரகம் வாயிலாக அண்மைய நிலவரங்களை அறிந்து கொள்வதற்காகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மலேசியர்களுடனும் உள்ளூர் அதிகாரிகளுடனும் விஸ்மா புத்ரா நெருங்கிய தொடர்பில் இருந்து வருகிறது.
துருக்கியில் உள்ள மலேசியர்கள் விழிப்புடனும் உள்ளூர் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களுக்குக் கீழ்ப்படிந்தும் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கும்படி விஸ்மா புத்ரா அறிவுறுத்தியது.
தூதரக உதவிக்கு மலேசியர்கள் சிஸ்லியின் போலட் பிளாசாவில் அமைந்துள்ள மலேசிய துணைத் தூதரகத்தை +90-212 989 10 01 (வேலை நேரம்) அல்லது புலனம் +90 531 716 05 51 (வேலை நேரத்திற்கு அப்பால்) அல்லது mwistanbul@kln.gov.my என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் தொடர்பு கொள்ளலாம் .
அந்நாட்டின் நிலைமையை விஸ்மா புத்ரா தொடர்ந்து கண்காணித்து தேவைப்பட்டால் புதுப்பிக்கப்பட்ட தகவல்களை வெளியிடும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துருக்கியில் புதன்கிழமை ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவான வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டது. இஸ்தான்புல்லின் சிலிவ்ரி மாவட்டத்தில் நிலநடுக்கம் மையமிட்டிருந்ததாக அந்நாட்டின் பேரிடர் மற்றும் அவசரநிலை மேலாண்மை ஆணையத்தை மேற்கோள் காட்டி அனடோலு ஏஜென்சி செய்தி வெளியிட்டுள்ளது.


