ஷா ஆலம், ஏப். 24 - நேற்று காலை ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட சுங்கை பூலோ, பாயா ஜெராஸ் பகுதியைச் சேர்ந்த சுமார் 100 குடும்பங்களுக்கு தொடக்கக் கட்ட உதவியாக 20,000 வெள்ளியை சிலாங்கூர் மந்திரி புசார் கழகம் அல்லது எம்பி.ஐ. அறக்கட்டளை ஒதுக்கியுள்ளது.
நான்கு தற்காலிக நிவாரண மையங்களில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு உணவு, மெத்தை, தலையணைகள் மற்றும் போர்வைகள் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டதாக எம்.பி.ஐ. அறக்கட்டளைத் தலைவர் அகமது அஸ்ரி ஜைனல் நோர் தெரிவித்தார்.
ஒவ்வொரு நிவாரண மையத்திலும் சுமார் 25 பாதிக்கப்பட்டவர்கள் அடைக்கலம் பெற்றுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. நேற்று காலை ஏற்பட்ட வெள்ளத்தில் அவர்களின் பெரும்பாலான வீடுகள் ஒரு மீட்டர் நீரில் மூழ்கின.
வெள்ளம் இன்னும் வடியவில்லை என்பதால் பாதிக்கப்பட்டவர்கள் சிறிது காலம் நிவாரண மையங்களில் தங்க வேண்டியிருக்கும். பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் தொடர் உதவிகளை வழங்குவோம் என்று மீடியா சிலாங்கூரிடம் அவர் தெரிவித்தார்.
ஹில்பார்க் நீர்ப்பிடிப்பு குளத்தின் கரை அதிகாலை 5.30 மணியளவில் உடைந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தாமான் ஶ்ரீ ஆலம் குடியிருப்பாளர்களுக்கு அறக்கட்டளை சார்பாக 150 மதிய உணவுப் பொட்டலங்களையும் தாங்கள் விநியோகித்ததாக அஸ்ரி கூறினார்.
இதற்கிடையில், மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க உடனடியாக கரையை சரிசெய்யும்படி வெள்ளம் சூழ்ந்த பகுதியின் மேம்பாட்டாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மந்திரி புசாரின் அரசியல் செயலாளர் சைபுடின் ஷாபி முகமது தெரிவித்தார்.
குடியிருப்பாளர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வில் சமரசம் செய்யும் மேம்பாட்டாளர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எக்ஸ் பதிவில் குறிப்பிட்டார்.


