கோலாலம்பூர், ஏப்ரல் 24 - உணவு அனுப்பும் சேவைக்கான செயலி வாயிலாக இன - மதவாத கருத்துக்களை அனுப்பினாலும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தேசிய ஒருமைப்பாட்டுத் துறை அமைச்சர் டத்தோ ஏரன் அகோ டகாங் வலியுறுத்தியுள்ளார்.
பினாங்கில் `grab food` ஓட்டுநரான பெண்மணியிடமிருந்து ஓர் ஆசிரியைக்கு இதுபோன்ற தகவல் அனுப்பப்பட்ட சம்பவம் வைரலாகியிருப்பது குறித்து அமைச்சர் கருத்துரைத்தார்.
இது அநாகரீகமான செயல், இதனை ஏற்றுக்கொள்ள முடியாது, காரணம் அது இன-மத நல்லிணக்கத்தையும் சீர்குலைத்து விடும் என அவர் சொன்னார்.
உணவு அனுப்பும் சேவை வழங்கும் நிறுவனங்களும் இது போன்ற பொறுப்பற்ற ஓட்டுநர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். நன்னடத்தைக் கோட்பாடுகளையும் கடுயைமாக்க வேண்டும் என நேற்று வெளியிட்ட அறிக்கையில் டத்தோ ஏரன் கேட்டுக் கொண்டார்.
இச்சம்பவம் குறித்து விசாரணைத் தொடங்கியிருப்பதை, செபராங் பிறை தெங்கா காவல்துறை தலைவர் துணை ஆணையர் ஹெல்மி கூரிஸ் உறுதிப்படுத்தினார்.
குற்றவியல் சட்டம் மற்றும் 1998-ஆம் ஆண்டு தொடர்பு-பல்லூடக ஆணையச் சட்டத்தின் கீழ் விசாரணை நடைபெற்று வருகிறது என தெரிவிக்கப்பட்டது.
ஆர்டர் செய்த உணவு வந்து சேராததால், ஓட்டுநருக்கு செயலி வாயிலாக தகவல் அனுப்பி கேட்ட போது இச்சம்பவம் நிகழ்ந்ததுள்ளது.
இந்து மதத்தைக் குறிப்பிட்டு தகாத வார்த்தைகளால் அந்த பெண் ஓட்டுநர் அனுப்பிய தகவலை குறிப்பிட்ட ஆசிரியர் சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ளார்.
மேலும், அவர் காவல்துறையிலும் தொடர்பு-பல்லூடக ஆணையமான MCMCயிலும் புகார் செய்துள்ளார்.


