கோலாலபூர், ஏப் 24 - பிறப்புத் பத்திரம் மற்றும் அடையாளக் கார்டைப்
பெறுவதற்கு தேசிய பதிவுத் துறையிடம் தவறானத் தகவல்களை
வழங்கிய குற்றத்திற்காக 15 பேருக்கு இங்குள்ள இரு மாஜிஸ்திரேட்
நீதிமன்றங்களில் வெ.800 முதல் வெ.3,500 வரை அபராதம் விதிக்கப்பட்டது.
தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து 50
முதல் 70 வயது வரையிலான அந்த 15 பேருக்கும் இத்தண்டனை
வழங்கப்பட்டது.
அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் மூன்று பெண்கள் மற்றும்
12 ஆண்களடங்கிய அக்குற்றவாளிகள் ஐந்து மாதச் சிறைத்தண்டனையை
அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது.
கடந்த 2004 முதல் 2022ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில்
தலைநகர், ஜாலான் மலுரி, பண்டார் துன் ரசாக் மற்றும் கெப்போங்கில்
உள்ள தேசிய பதிவுத் துறை அலுவலகங்களில் பிறப்பு பத்திரப் பதிவை
செய்யும் போது தவறான தகவல்களை வழங்கியதாக 13 பேர் மீது
குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
அதே காலக்கட்டத்தில் கோலாலம்பூரில் உள்ள தேசிய பதிவுத் துறை
அலுவலகங்களில் தவறான தகவல்கள் அடங்கிய பிறப்பு பத்திரத்தைப்
பயன்டுத்தி 12 வயதானவர்களுக்கு அடையாளக் கார்டை பெறுவதற்கு
விண்ணப்பம் செய்த குற்றச்சாட்டை மேலுல் நால்வர் எதிர்நோக்கியிருந்தனர்.


