கோலாலம்பூர், ஏப். 24 - புத்ரா ஹைட்ஸ் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 18 பேர்
இன்னும் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருவதாக
சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜூல்கிள்ளி அகமது கூறினார்.
நேற்று நண்பகல் 12.00 மணி நிலவரப்படி, இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டு
அரசாங்க மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வந்த
132 பேர் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று அவர் சொன்னார்.
நேற்று வரை புதிதாக யாரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவும்
இல்லை, உயிரிழக்கவும் இல்லை. இந்த சம்பவத்தில் யாருக்கும்
உயிரிழப்பு ஏற்படாதது மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவில்
அனுமதிக்கப்படாதது குறித்து நாங்கள் மனநிறைவுடைவதோடு
இறைவனுக்கும் நன்றி தெரிவிக்கிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.
நேற்று இங்கு 2025 தென்கிழக்காசிய மருந்தக மற்றும் சுகாதார பராமரிப்பு
மீதான மாநாட்டை தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர்
இதனைத் தெரிவித்தார்.
கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி நிகழ்ந்த இந்த தீவிபத்தில் ஏற்பட்ட காயங்கள்
காரணமாக 150 பேர் அரசாங்க மற்றும் தனியார் மருத்துவமனைகளில்
சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக அவர் மேலும் சொன்னார்.
காலை மணி 8.10க்கு ஏற்பட்ட இந்த விபத்தில் தீ 30 மீட்டர் உயரத்திற்கு
கொளுந்து விட்டெரிந்தது. தீயின் தாக்கம் 1,000 டிகிரி செல்சியஸ் வரை
உயர்ந்த வேளையில் தீயை அணைக்க எட்டு மணி நேரம் பிடித்தது.


