அதிகாரிகளால் அந்த இடத்தில் மேற்கொள்ளப்படும் மண் தோண்டும் பணியை ஊடகவியலாளர்கள் நேரடியாகப் பார்ப்பதற்காக இந்தப் பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ஹூசேன் ஓமார் கான் கூறினார்.
சம்பவ இடத்தை அகழ்ந்தெடுக்கும் பணியின் போது வெடிப்புக்குள்ளான எரிவாயு குழாய் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், சமீபத்திய நிச்சயமற்ற வானிலை காரணமாக தொடர் கட்டப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன அவர் தெரிவித்தார்.
இந்த வாரம் ஒவ்வொரு நாளும் பெய்து வரும் மழையின் காரணமாகப் பணியில் பல இடையூறுகளை நாங்கள் சந்தித்து வருகிறோம்.
சம்பவ இடத்தில் மண்ணைத் தோண்டும் பணி கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் ஒரு வாரத்திற்குள் பூர்வாங்க தொழில்நுட்ப விசாரணை அறிக்கை தயாராகிவிடும் எனத் தாங்கள் எதிர்பார்ப்பதாக ஹூசேன் முன்னதாகக் கூறியிருந்தார்.
பூர்வாங்க அறிக்கை வெளியிடப்படுவதற்கு முன்பு காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை மற்றும் வேலையிட பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை ஆகியவை தடயவியல் ஆய்வினை மேற்கொள்ளும் என்று அவர் கூறினார்.
மண்ணைத் தோண்டும் போது கண்டெடுக்கப்பட்ட மாதிரிகள் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் வெடிப்புக்கான காரணத்தை அடையாளம் காண உதவக்கூடிய பிற சிதறிய பாகங்களைத் தேடும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் சொன்னார்.
இம்மாதம் 1 ஆம் தேதி காலை 8.10 மணிக்கு அப்பகுதியில் எரிவாயு குழாய் வெடிப்பு ஏற்பட்டது. இதனால் ஒரு பெருமளவில் தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்க கிட்டத்தட்ட எட்டு மணி நேரம் ஆனது.


