ஷா ஆலம், ஏப்ரல் 23: இன்று அதிகாலை முதல் தொடர்ந்து பெய்த கனமழையால் சிலாங்கூரில் உள்ள பல மாவட்டங்கள் திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
சுங்கை பூலோ, பெட்டாலிங் ஜெயா மற்றும் சுபாங் ஜெயா ஆகிய மாவட்டங்களில் 86 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் வெளியேற்றப்படவில்லை என சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (JBPM) உதவி செயல்பாட்டு இயக்குநர் அஹ்மட் முக்லிஸ் முக்தார் கூறினார்.
சுங்கை பூலோவில் உள்ள கம்போங் பயா ஜராஸ் ஹிலிரில், 80 வீடுகள் மூன்று அடி ஆழத்திற்கு வெள்ளத்தில் மூழ்கியதாகவும், ஆனால் நீர்மட்டம் குறைந்து வருவதாகவும் அவர் கூறினார்.
"கம்போங் பாரு சுங்கை பூலோவில், ஆறு வீடுகள் இரண்டு அடி ஆழம் வரை தண்ணீரில் மூழ்கின, ஆனால் தண்ணீர் குறைந்து வரும் போக்கைக் காட்டியதால் பாதிக்கப்பட்டவர்கள் வெளியேற மறுத்துவிட்டனர்," என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
இருப்பினும், இந்த சம்பவத்தில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும், நீர்மட்டம் குறையத் தொடங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.
ஜாலான் PJU 1A/46 பெட்டாலிங் ஜெயாவில் ஐந்து அடி உயரத்திற்கு தண்ணீர் நிரம்பியிருந்தபோது, அங்கு நடந்த ஒரு சம்பவத்தில், 50 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் பொதுமக்களால் மீட்கப்பட்டார் என அஹ்மட் முக்லிஸ் தெரிவித்தார்.
"இச்சம்பவத்தில் ஒரு ஹோண்டா வகை காரும் சிக்கிக் கொண்டது. ஆனால், சம்பவ இடத்தில் தண்ணீர் முற்றிலும் வடிந்துவிட்டது," என்று அவர் கூறினார்.
- பெர்னாமா


