குவாந்தான், ஏப். 22- இணையத் தளம் ஒன்றில் கடந்தாண்டு வெளியான இல்லாத முதலீட்டுத் திட்டத்தால் கவரப்பட்ட பொறியாளர் ஓருவர் 11 லட்சம் வெள்ளிக்கும் அதிகமான சேமிப்புத் தொகையை இழந்தார்.
முப்பத்தாறு வயதான பாதிக்கப்பட்ட நபர் கடந்தாண்டு டிசம்பர் 3 ஆம் தேதி அந்த திட்டத்தில் முதலீடு செய்யத் தொடங்கினார் என்று பகாங் காவல்துறைத் தலைவர் டத்தோஸ்ரீ யஹாயா ஓத்மான் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
முதலீட்டு நோக்கத்திற்காக அவர் ஏழு வங்கி கணக்குகளுக்கு 19 பரிவர்த்தனைகள் மூலம் பணத்தைச் செலுத்தியுள்ளார். இதற்காக அவர் தனது சேமிப்பு தொகையோடு குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடமிருந்து கடனும் வாங்கியுள்ளார் என அவர் குறிப்பிட்டார்.
பாதிக்கப்பட்டவருக்கு அந்த முதலீடு மூலம் வெ. 15,032.53 லாபம் கிடைத்தது. ஆனால், முதலீடு 40 லட்சம் வெள்ளிக்கும் மேல் இருக்க வேண்டும் என தள நிர்வாகி கூறி முதலீட்டு வருமானத்தை திரும்பப் பெறுவதைத் தடுக்க பல்வேறு சாக்குகளைக் கூறினார்
என்று யாஹ்யா சொன்னார்.
தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பாதிக்கப்பட்ட நபர் நேற்று குவாந்தான் மாவட்ட காவல் தலைமையகத்தில் புகார் அளித்ததாக அவர் தெரிவித்தார்.


