கோத்தா பாரு, ஏப். 22 - பொது நடவடிக்கைப் படையின் (பி.ஜி.ஏ.) தென்கிழக்கு படைப்பிரிவு நேற்று ரத்தாவ் பஞ்சாங்கில் மேற்கொண்ட ஓப் தாரிங் வாவாசன் கிளந்தான் சோதனை நடவடிக்கையில் 5,000 மெர்பாவ் வகை மரக்கன்றுகளைக் கடத்தும் முயற்சி முறியடிக்கப்பட்டது.
இரவு 8.30 மணியளவில் ஒரு பள்ளிக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான நிலையில் காணப்பட்ட ஒரு லோரியை பி.ஜி.ஏ. 7வது படைப்பிரிவுக் குழு நிறுத்தியதாக பி.ஜி.ஏ. தென்கிழக்கு படைப்பிரிவின் கட்டளை அதிகாரி டத்தோ நிக் ரோஸ் அஜான் நிக் அப்துல் ஹமீட் கூறினார்.
அந்த லோரியில் நடத்தப்பட்டச் சோதனையில் அதில் மரக்கன்றுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறிய அவர், இந்த மரக்கன்றுகள் அண்டை நாட்டிலிருந்து கடத்தி வரப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது என்றார்.
மேலும் ஆய்வு செய்ததில் மரக்கன்றுகளில் பூச்சிகள் மற்றும் நோய்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த மரக்கன்றுகளை கொண்டு வருவது தொடர்பான எந்த ஆவணத்தையும் வழங்க 42 வயதான லாரி ஓட்டுநர் தவறிவிட்டார் என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
வாகனம் உட்பட 550,000 மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு மேல் நடவடிக்கைக்காக கிளந்தான் மாநில வேளாண்மைத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக நிக் ரோஸ் அஜான் குறிப்பிட்டார்.
இந்த பறிமுதல் நடவடிக்கை தொடர்பில் 1976ஆம் ஆண்டு தாவர தனிமைப்படுத்தல் சட்டத்தின் (சட்டம் 167) 5 வது பிரிவின் கீழ் விசாரணை நடத்தப்படுகிறது.
உள்ளூர் தாவரங்களின் சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வெளிநாட்டு தாவரங்களின் கடத்தலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை பி.ஜி.ஏ. தொடர்ந்து தீவிரப்படுத்தும் என்று அவர் கூறினார்.


