சுக்காய், ஏப். 22- இங்குள்ள சுய சேவை சலவை நிலையத்தில் தன் மகளைக் கடுமையாகக் கடிந்து கொண்டதோடு அடித்தும் காயப்படுத்திய சந்தேகத்தின் பேரில் பெண்மணி ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நாற்பத்தைந்து வயதுடைய அந்த மாது நேற்றிரவு 7.27 மணியளவில் இங்குள்ள தனது வீட்டில் கைது செய்யப்பட்டதாகக் கெமாமான் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் முகமது ராஸி ரோஸ்லி கூறினார்.
சுய சேவை சலவை நிலையம் ஒன்றில் சிறுமியை அவரின் தாயார் என நம்பப்படும் பெண்மணி ஒருவர் கடுமையாகத் திட்டி அடிப்பதை சித்தரிக்கும் காணொளி பதிவு ஒன்றின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர் சொன்னார்.
கடையின் முன் அங்கும் இங்கு ஓடிக் கொண்டிருந்த தன் மகள்
வாகனங்களால் மோதப்பட்டு விடுவாரோ என்ற அச்சத்தில் அப்பெண் தன்
மகளை கண்டித்து அடித்தது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய
வந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
நெற்றியில் காயங்களுக்குள்ளான அச்சிறுமி கெமாமான் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றப் பின்னர் தந்தையில் பராமரிப்பில் வைக்கப்பட்டுள்ளார் என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
அந்த மாது 1994ஆம் ஆண்டு குடும்ப வன்முறைச் சட்டத்தின் 323/18ஏ பிரிவின் கீழ் விசாரணைக்காக இன்று வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என அவர் சொன்னார்.


