தாப்பா, ஏப். 22- எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவிருக்கும் ஆயர் கூனிங்
இடைத் தேர்தலில் 70 விழுக்காட்டிற்கு அதிகமான வாக்காளர்கள் தங்கள்
ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுவர் என தேர்தல் ஆணையம்
(எஸ்.பி.ஆர்.) எதிர்பார்க்கிறது.
அண்மைய காலமாக நிலவி வரும் நிச்சயமற்ற வானிலையைக் கருத்தில்
கொண்டு வரும் 26ஆம் தேதி முன்கூட்டியே வாக்களிக்க வருமாறு
வாக்காளர்களை தேர்தல் ஆணையத்தின் தலைவர் டத்தோஸ்ரீ ரமலான்
ஹருண் கூறினார்.
இன்று நடைபெறும் தொடக்கக் கட்ட வாக்களிப்பில் 500 போலீஸ்
அதிகாரிகள், உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் துணைவியர்
வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ள நிலையில் இன்றைய வாக்குப் பதிவு 90
விழுக்காட்டை எட்டும் எனத் தாங்கள் எதிர்பார்ப்பதாக அவர் சொன்னார்.
இந்த தொடக்க கட்ட வாக்களிப்பை முன்னிட்டு இரு வாக்களிப்பு
மையங்கள் திறக்கப்பட்டுள்ள வேளையில் காலை 8.00 மணி தொடங்கி
வாக்களிப்பு சுமூகமாக நடைபெற்று வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
காலை 9.00 மணி வரை 22.8 விழுக்காட்டு வாக்காளர்கள் வாக்களித்தனர்
என்று இங்குள்ள பி.ஜி.ஏ. மூன்றாம் படைபிரிவின் அதிகாரிகள்
பொழுதுபோக்கு மண்டபத்தில் வாக்களிப்பை பார்வையிட்டப் பின்னர்
செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
தாப்பா போலீஸ் தலைமையகத்தைச் சேர்ந்த 24 பேரும் தங்கள்
வாக்குகளைச் செலுத்தி விட்டதாக நம்பப்படுகிறது என்று அவர்
சொன்னார்.
ஆயர் கூனிங் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இஷாம் ஷஹாருடின்
மாரடைப்பு காரணமாகக் கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி காலமானதைத்
தொடர்ந்து அங்கு இடைத் தேர்தல் நடைபெறுகிறது.
இந்த தேர்தலில் பாரிசான் நேஷனல் சார்பில் டாக்டர் முகமது யூஸ்ரி
பக்கிர், பெரிக்கத்தான் நேஷனல் சார்பில் அப்துல் முகைமின் மாலிக்,
சோசலிச கட்சி சார்பி பவானி கேஎஸ். ஆகியோர் போட்டியிடுகின்றனர்.


