ஷா ஆலம், ஏப். 22- கோல லங்காட் மாவட்டத்தின் ஜென்ஜாரோமில் உள்ள
பூக்கடை ஒன்றில் பெண்ணிடம் பாராங் கத்தி முனையில் நகைகளைக்
கொள்ளையிட்ட ஆடவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் தன் மகளுடன் பூக்கடையில் இருந்த
போது நிகழ்ந்த இக்கொள்ளைச் சம்பவம் தொடர்பில் மாது
ஒருவரிடமிருந்து மாலை 4.50 மணிக்கு தாங்கள் புகாரைப் பெற்றதாகக்
கோல லங்காட் மாவட்ட துணைப் போலீஸ் தலைவர் டிஎஸ்பி முகமது
சுபியான் அமின் கூறினார்.
தாங்கள் கடையில் இருந்த போது கையில் பாராங்கத்தியுடன் முகத்தை
துணியால் மூடிய நிலையில் வெள்ளை நிற புரோட்டோன் சாகா
காரிலிருந்து இறங்கிய சில ஆடவர்கள் தங்களைச் சூழ்ந்து கொண்டதாகப்
பாதிக்கப்பட்ட மாது தனது புகாரில் கூறியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அந்த மாதுவை கத்தியைக் காட்டி அச்சுறுத்திய அந்த நபர்கள் அவர்
அணிந்திருந்த சுமார் 4,000 வெள்ளி மதிப்புள்ள தங்கச் சங்கிலியைப்
பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பினர் என்றார் அவர்.
இந்த சம்பவத்தில் அந்த மாதுவுக்கும் அவரின் மகளுக்கும் காயம் ஏதுவும்
ஏற்படவில்லை என்று இன்று வெளியிட்ட அறிக்கையில் அவர்
தெரிவித்தார்.
இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் தண்டனைச் சட்டத்தின் 395/397வது
பிரிவின் கீழ் விசாரணை அறிக்கை திறக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அவர்,
இது குறித்து தகவல் அறிந்தவர்கள் 03-31872222 என்ற எண்களில் கோல
லங்காட் மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் நடவடிக்கை அறையைத்
தொடர்பு கொள்ளும்படி கேட்டுக் கொண்டார்.


