ஷா ஆலம், ஏப். 22- சிலாங்கூர் மக்களிடையே காசநோய் பரவலைத்
தடுக்கும் தொடர்ச்சியான முயற்சியின் ஒரு பகுதியாக ஆண்டுக்கு 800
வெள்ளி வழங்க வகை செய்யும் காச நோய் (டிபி) சிகிச்சை ஊக்குவிப்புத்
திட்டத்தை மாநில அரசு தொடர்ந்து அமல்படுத்தும்.
குறைந்த வருமானம் பெறும் தரப்பினரை இலக்காகக் கொண்ட மாநில
அரசின் இந்த பரிவுத் திட்டம் நோயாளிகள் முழுமையாகக் குணமடையும்
வரை சிகிச்சைப் பெறுவதை உறுதி செய்யும் நோக்கத்திலானது என்று
பொது சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஜமாலியா
ஜமாலுடின் கூறினார்.
காசநோயாளிகள் குறிப்பாக குறைந்த வருமானம் பெறும் பி40 தரப்பினர்
தொடர்ச்சியாக சிகிச்சைப் பெற்று முழுமையாக குணமடைவதை உறுதி
செய்யும் கடப்பாட்டை அரசாங்கம் கொண்டுள்ளது என அவர் அறிக்கை
ஒன்றில் குறிப்பிட்டார்.
கடந்தாண்டு நாடு முழுவதும் 26,183 காசநோளாளிகள் அடையாளம்
காணப்பட்ட வேளையில் அவர்களில் 20 விழுக்காட்டினர் அதாவது 5,337
பேர் சிலாங்கூரைச் சேர்ந்தவர்களாவர் என்று அவர் சொன்னார்.
காச நோயாளிகள் எண்ணிக்கை கடந்த 2020ஆம் ஆண்டு தொடங்கி ஆண்டு
தோறும் சராசரி 2.5 விழுக்காடு அதிகரித்து வருவதை தரவுகள்
காட்டுவதாகக் கூறிய அவர், தொடர்ச்சி சிகிச்சையின் அவசியத்தை இந்த
எண்ணிக்கை உயர்வு காட்டுகிறது என்றார்.
இருப்பினும், மாநில அரசு, மாநில சுகாதாரத் துறை, மலேசிய காசநோய்
தடுப்புச் சங்கம் ஆகிய தரப்பினரின் ஒத்துழைப்பின் வாயிலாக
இந்நோய்க்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை உயர்வு கண்டு
வருகிறது.
கடந்த 2020ஆம் ஆண்டு 80 விழுக்காடாக இருந்த காச நோய்க்கு சிகிச்சைப் பெறுவோர் எண்ணிக்கை கடந்தாண்டு 88 விழுக்காடாக உயர்வு கண்டது என்றார் அவர்.


