கோலாலம்பூர், ஏப். 22 - கலை நிகழ்ச்சிகள், குறிப்பாக மின்- நடன இசை நிகழ்ச்சிகளுக்கு (இ.டி.எம்.) ஏற்பாடு செய்வோர் பின்பற்ற வேண்டிய ஐந்து புதிய சீரான செயலாக்க நடைமுறைகளை (எஸ்.ஒ.பி.) இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது.
இளைஞர்களிடையே போதைப்பொருள் துஷ்பிரயோகத்தைத் தடுப்பது, பொழுதுபோக்கு நடவடிக்கைகள் பாதுகாப்பான சூழலில் நடத்தப்படுவதை உறுதி செய்வது ஆகிய நோக்கங்களின் அடிப்படையில் உள்துறை அமைச்சு சுகாதார அமைச்சுடன் இணைந்து எடுத்துள்ள விவேக பங்காளித்துவ நடவடிக்கை இதுவாகும் என்று அமைச்சர் ஹன்னா இயோ கூறினார்.
அந்த ஐந்து நடைமுறைகளில் நிகழ்ச்சிக்கு வருபவர்களுக்கு நீரேற்றப் புள்ளிகளை அமைத்தல், அவசரகாலத் தேவைக்கு மருத்துவக் குழுக்களை தயார் நிலையில் வைத்தல், போதைப்பொருள் துஷ்பிரயோகத்தின் ஆபத்துகள் மற்றும் தங்களின் அருகில் உள்ளவர்களுக்கு அவசரநிலை ஏற்பட்டால் ஒருவர் செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்த டிரெய்லர் செய்திகள், சுவரொட்டிகள் அல்லது வீடியோக்களை வெளியிடுதல், நிகழ்ச்சி அரங்குகளுக்கு அருகிலுள்ள சுகாதார வசதிகளை அவசரகால தேவைகளுக்குத் தயாராக இருக்குமாறு எச்சரிக்கை செய்தல் மற்றும் கே9 பிரிவைப் பயன்படுத்துதல் ஆகியவை அதில் அடங்கும்.
இசை நிகழ்ச்சி எஸ்.ஒ.பி. களை மேம்படுத்துவது இ.டி.எம். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு விதிக்கப்படும் புதிய நிபந்தனைகளாகும். குறிப்பாக ஸ்டேடியம் கார்ப்பரேஷன் மற்றும் சிப்பாங் அனைத்துலகப் பந்தயத் தடம் போன்ற அமைச்சின் வசதிகளை பயன்படுத்தும்போது இது அமல்படுத்தப்படும் என்று அவர் சொன்னார்.
நேற்று புக்கிட் ஜாலில் அரங்கில் நடைபெற்ற போதைப் பொருள் இல்லாத இளைஞர் பிரச்சாரம் தொடர்பான செய்தியாளர் மாநாட்டின் போது அவர் இதனைக் கூறினார்.
ஸ்டேடியம் கார்ப்பரேஷன் மற்றும் சிப்பாங் அனைத்துலக பந்தயத் தடம் ஆகியவை தங்கள் மாதாந்திர இசை நிகழ்ச்சி அட்டவணைகளை அரச மலேசியா காவல்துறை மற்றும் தேசிய போதைப்பொருள் எதிர்ப்பு நிறுவனத்துடன் பகிர்ந்து கொள்ளும் என்றும் அன்னா இயோ தெரிவித்தார்.


