ஷா ஆலம், ஏப். 22- ஸ்ரீ மூடாவில் நிலவும் வெள்ளப் பிரச்சனை
தொடர்பில் அந்த குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த மக்கள் வழங்கிய
மகஜரை மந்திரி புசாரின் அரசியல் செயலாளர் பெற்றுக் கொண்டார்.
தாமான் ஸ்ரீ மூடாவில் உள்ள வடிகால் நீர்பாசனத் துறையின் வெள்ளத்
தடுப்பு மதகில் நேற்று மேற்கொண்ட சிறப்பு ஆய்வின் போது தம்மிடம்
வழங்கப்பட்ட இந்த மகஜர் மேல் நடவடிக்கைக்காக மந்திரி புசார்
டத்தோஸ்ரீ அமருடின் ஷாரியின் பார்வைக்கு கொண்டுச் செல்லப்படும்
என்று சைபுடின் ஷாபி கூறினார்.
இந்த சிறப்பு ஆய்வின் போது கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர்
எஸ்.பிரகாஷ், அடிப்படை வசதிகள் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினரின்
பிரதிநிதி, பேரிடர் மேலாண்மை துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினரின்
பிரதிநிதி, ஜே.பி.எஸ். இயக்குநர், தெனாகா நேஷனல் இயக்குநர்,
தொடர்புடைய அரசு நிறுவனங்கள் மற்றும் பொது மக்களும் வருகை
புரிந்ததாக அவர் சொன்னார்.
தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ளத் தடுப்புத் திட்டங்கள்
தொடர்பில் சிலாங்கூர் மாநில ஜே.பி.எஸ். இயக்குநர் டத்தோ டிஎஸ்
முகமது நஸ்ரி யாஸ்மினிடமிருந்து விளக்கம் பெறுவது மற்றும் இந்த
திட்டங்கள் விரைவாக மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்வதில் மாநில
அரசின் பங்களிப்பு ஆகியவை இந்த சந்திப்பின் நோக்கமாக
அமைந்திருந்தது என்று அவர் தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டார்.
இப்பகுதியில் மேற்கொள்ளப்படும் வெள்ளத் தடுப்புப் பணிகளை
கண்காணிக்க சிறப்பு பணிக்குழு அமைக்கப்படும் என்று தொகுதி
சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் முன்னதாக கூறியிருந்தார்.
வரும் மே அல்லது ஜூன் மாதம் தொடங்கவிருக்கும் இந்த வெள்ளத்
தடுப்புத் திட்டத்தின் மேம்பாடுகளை குடியிருப்பாளர்களின் பிரதிநிதிகள்,
ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர் அலுவலக
பிரதிநிதிகள் அடங்கிய அந்த சிறப்பு பணிக்குழு கண்காணிக்கும் என அவர்
குறிப்பிட்டார்.
கடந்த வாரம் பெய்த அடைமழையில் சிலாங்கூர் மாநிலத்தின் பூச்சோங்,
ஷா ஆலம், கிள்ளான், உலு லங்காட் உள்ளிட்ட இடங்களில் திடீர்
வெள்ளம் ஏற்பட்டது.


