(ஆர்.ராஜா)
ஷா ஆலம், ஏப் 21- வட கிள்ளான் வட்டாரத்தில் வீற்றிருக்கும் இந்து
ஆலயங்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து
விவாதிப்பதற்காக சிறப்பு சந்திப்பு ஒன்று அண்மையில் நடத்தப்பட்டது.
காப்பார் வட்டார இந்து சங்கத் தலைவரும் கிள்ளான் அரச மாநகர் மன்ற
உறுப்பினருமான அருள்நேசன் தலைமையில் நடைபெற்ற இந்த சந்திப்பு
நிகழ்வில் இவ்வட்டாரத்திலுள்ள 46 ஆலயங்களின் பிரதிநிதிகள் கலந்து
கொண்டனர்.
காப்பார் வட்டாரத்திலுள்ள இரு ஆலயங்களுக்கு கிள்ளான் மாவட்ட
மற்றும் நில அலுவலகம் அண்மையில் சீல் வைத்ததைத் தொடர்ந்து இந்த
சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக அருள்நேசன் கூறினார்.
நில உரிமை விவகாரம் காரணமாக அவ்விரு ஆலயங்களுக்கும் சீல்
வைக்கப்பட்ட நிலையில் செமந்தா தொகுதி இந்திய சமூகத் தலைவர்
வி.கலையரசன் உடனடியாக தலையிட்டு பக்தர்களின் வழிபாட்டிற்கு
ஆலயத்தை திறந்து விடுவதற்கான ஏற்பாட்டைச் செய்ததாக அவர்
சொன்னார்.
காப்பார் வட்டாரத்தில் மொத்தம் 58 ஆலயங்கள் இந்து சங்கத்திடம் பதிவு
செய்துள்ளன. அரசாங்கத்திடம் முறையாகப் பதிவு பெற்ற மற்றும் பதிவு
பெறாத ஆலயங்களும் இதில் அடங்கும். இந்த ஆலயங்களின் நிலை
குறித்த முறையான தரவுகளைப் பெறும் அதேவேளையில் அவற்றின்
எதிர்கால வளர்ச்சி தொடர்பான விஷயங்களை விவாதிக்கும் நோக்கிலும்
இந்த கூட்டத்திற்கு இந்த சங்கம் ஏற்பாடு செய்தது என்று அவர் மேலும்
குறிப்பிட்டார்.
நம் நாட்டில் அண்மைய காலமாக இந்து ஆலயங்கள் பல சிக்கல்களை
எதிர்நோக்கி வருகின்றன. இத்தகைய சிக்கல்கள் வராமலிருப்பதை உறுதி செய்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைந்து எடுப்பது அவசியமாகும். இதன் அடிப்படையில் ஆலயத் தலைவர்களை சந்திப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன என்று அருள்நேசன் தெரிவித்தார்.
மேலும், ஆலய நிர்வாகம் தொடர்பான விவகாரங்கள், வழிபாட்டுத்
தலங்களின் பாதுகாப்பு, வட்டார மக்களுக்கு ஆலயங்கள் ஆற்ற வேண்டிய
பணிகள் உள்ளிட்ட விஷயங்களும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன
என்றார் அவர்.
இந்த நிகழ்வில் சிலாங்கூர் மாநில இந்து சங்கத்தின் வழிபாட்டுத்
தலங்களுக்கான பிரிவின் தலைவர் அழகேந்திரா, வட கிள்ளான் மாவட்ட
போலீஸ் தலைமையகத்தின் பிரதிநிதி தனசேகரன், செமந்தா தொகுதி
இந்திய சமூகத் தலைவரும் காப்பார் மஇகா தொகுதித் தலைவருமான
கலையரசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


