ஷா ஆலம், ஏப். 21 - கோத்தா கெமுனிங் தொகுதியில் மேற்கொள்ளப்படும் வெள்ளத் தடுப்புத் திட்டங்களின் முன்னேற்றத்தைக் கண்காணிக்க ஒரு சிறப்புப் பணிக்குழு அமைக்கப்படும் என்று தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன் அறிவித்துள்ளார்.
தமது தரப்பு, குடியிருப்பாளர்கள் பிரதிநிதிகள், மாநகர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் மந்திரி பெசார் அலுவலகத்தின் பிரதிநிதிகள் அடங்கிய இக்குழு வரும் மே மாத இறுதியில் அல்லது ஜூன் தொடக்கத்தில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ள அந்த வெள்ளத் தணிப்புத் திட்டத்தை கண்காணிக்கும் என்று அவர் கூறினார்.
மந்திரி புசாரின் அரசியல் செயலாளர் சைபுடின் ஷாஃபி முகமது, குடியிருப்பாளர்கள் பிரதிநிதிகள் மற்றும் நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறை (ஜே.பி.எஸ்.) உட்பட பல துறைகளின் பிரதிநிதிகளுடன் இன்று நடைபெற்ற சந்திப்பின் போது இந்தத் திட்டம் குறித்து தனக்கு விளக்கமளிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
ஸ்ரீ மூடா, புக்கிட் கெமுனிங், கம்போங் பாரு ஹைகோம், கம்போங் புக்கிட் லஞ்சோங், கம்போங் லஞ்சோங் ஜெயா மற்றும் தாமான் ஆலம் இண்டா உள்ளிட்டப் பகுதிகளில் வெள்ளத் தணிப்புத் திட்டங்களைக் கண்காணிக்கும் நோக்கத்திற்காக ஒரு பணிக்குழுவை அமைக்க நான் முன்மொழிகிறேன்.
அக்குழு கவனம் செலுத்தும் வெள்ளத் தணிப்புத் திட்டங்களில் ஸ்ரீ மூடா மதகு அருகே உள்ள நீர் இறைப்பு பம்ப் மேம்படுத்தல் மற்றும் நீர் சேகரிப்பு குளம் ஆகியவை அடங்கும். கூடுதலாக, கெமுனிங் உத்தாமாவிலிருந்து ஸ்ரீ மூடாவுக்கு நீரை வெளியேற்றுவதற்கு ஒரு புதிய நீர் சேகரிப்பு குளம் கட்டப்படும் என்று அவர் சிலாங்கூர் மீடியாவிடம் கூறினார்.
அனைத்து பணிகளையும் விரைவுபடுத்தும்படி மாநில அரசு பிரதிநிதி இச்சந்திப்பின் போது உத்தரவிட்டதாகப் பிரகாஷ் மேலும் குறிப்பிட்டார்.
குடியிருப்பாளர்களின் முறையீடுகளைக் கவனத்தில் கொண்டு பாதிக்கப்பட்ட பகுதிகளில் வெள்ளப் பிரச்சினை விரைவில் தீர உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த மந்திரி புசாருக்கும் அனைத்து அரசு நிறுவனங்களுக்கும் தாம் நன்றி கூறுவதாக அவர் கூறினார்.
கடந்த வாரம் சிலாங்கூரில் உள்ள பூச்சோங், ஷா ஆலம், கிள்ளான் மற்றும் உலு லங்காட் ஆகிய இடங்களில் அதிகாலை முதல் தொடர்ந்து பெய்த கனமழையைத் தொடர்ந்து திடீர் வெள்ளம் ஏற்பட்டது.
கடல் பெருக்குடன் கூடிய கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாகப் பேரிடர் மேலாண்மைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது நஜ்வான் ஹலிமி தெரிவித்தார்.


