சியோல், ஏப். 21- தயார் நிலையிலிருக்கும் போயிங் விமானங்களை
பெற்றுக் கொள்வதை சீன விமான நிறுவனங்கள் நிறுத்திக் கொள்ளும்
பட்சத்தில் அவற்றைக் கொள்முதல் செய்வது தொடர்பில் மலேசியன்
ஏர்லைன்ஸின் தாய் நிறுவனமான மலேசியா எவியேஷன் குரூப்
(எம்.ஏ.ஜி.) போயிங் நிறுவனத்துடன் பேச்சு நடத்தி வருகிறது.
சீன நாட்டு வாடிக்கையாளர்களுக்காக தயார் நிலையில் வைக்கப்பட்ட சில
போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களை போயிங் சீனாவிலிருந்து
திரும்பப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த விமானங்கள் ஏன் திரும்ப ஒப்படைக்கப்படுகின்றன என்பதற்கான
காரணத்தை போயிங் அல்லது சீனா இதுவரை வெளியிடவில்லை.
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே நிகழ்ந்து வரும் வரிவிதிப்பு
போர் காரணமாக விமானத்தைப் பெறுவதற்கான வரிசையில் இடம்
கிடைக்கும் பட்சத்தில் முன்கூட்டியே விமானத்தைப் பெறுவதற்குரிய
வாய்ப்பு எம்.ஏ.ஜி.க்கு கிட்டும் என்று அதன் நிர்வாக இயக்குநர் டத்தோ
இஷாம் இஸ்மாயில் கூறியதாகப் பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது.
சீனாவின் நிராகரிப்பினால் ஏற்பட்ட வெற்றிடங்களை நிரப்புவது தொடர்பில்
எம்.ஏ.ஜி. போயிங் நிறுவனத்துடன் பேச்சு நடத்தி வருவதாக அந்த செய்தி
நிறுவனம் குறிப்பிட்டது.
உலகம் முழுவதும் உள்ள விமான நிறுவனங்களுக்கு கடுமையான
விமானத் தேவை ஏற்பட்டுள்ளது. பெருந்தொற்றுப் பரவல் காரணமாக
ஏற்பட்ட விமான விநியோகச் சிக்கல், அதிகரிக்கப்பட்ட ஒழுங்கு முறை
கண்காணிப்பு, தொழிலாளர் வேலை நிறுத்தம் உள்ளிட்டவை இந்த
தாமதத்திற்கு காரணமாக விளங்குகின்றன.
அரசாங்க நிதி நிறுவனமான கஸானாவுக்குச் சொந்தமான எம்.ஏ.ஜி. தனது
விமானங்களை புதுப்பித்து வருகிறது. இதன் அடிப்படையில் குறுகிய உடலமைப்பைக் கொண்ட 55 போயிங் 737 மேக்ஸ் புதிய தலைமுறை விமானங்களுக்கு அது ஆர்டர் அளித்துள்ளது.


