ஷா ஆலம், ஏப். 21 - உள்ளூர் வங்கிகளில் பங்குகளை வாங்குவதன் மூலம் நிதித்துறையில் நுழைவதற்கான சாத்தியக்கூறுகளை சிலாங்கூர் அரசு ஆராய்ந்து வருகிறது.
நிலம் தொடர்பான வருமானத்தை தற்போது சார்ந்திருப்பதைத் தாண்டி, அதன் வருமானத்திற்கான வழிகளைப் பல்வகைப்படுத்தும் விரிவான முயற்சியின் ஒரு பகுதியாக இந்தத் திட்டம் அமைந்துள்ளது என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறியதாக தி எட்ஜ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
நீண்ட கால அடிப்படையில் மிகவும் நிலையான மற்றும் மீள்தன்மை கொண்ட நிதி திட்டமிடலுக்கு வழி வகுக்க இதுபோன்ற ஒரு நடவடிக்கை மிகவும் முக்கியமானது என்று அமிருடின் தெரிவித்தார்.
நிதித்துறையை இன்னும் பன்முகப்படுத்த நாங்கள் விரும்புகிறோம். மேலும், மாநில அரசு தற்போதுள்ள நிதி நிறுவனத்தில் நேரடியாக அல்லது அரசுக்குச் சொந்தமான நிறுவனம் மூலமாகப் பங்குகளை வாங்குவது தொடர்பான பேங்க் நெகாரா மலேசியாவின் கடுமையான நிபந்தனைகளுக்கு ஏற்ப விவாதங்களை நடத்தி வருகிறது என்று அவர் அறிக்கையில் கூறினார்.
நிலம் மிகவும் வரையறுக்கப்பட்டதாக மாறும் தற்போதைய சூழலில் சிலாங்கூரின் மத்திய கால மற்றும் நீண்ட கால நிலைத்தன்மைக்கு இந்த முன்னெடுப்பு
இது மிகவும் முக்கியமானது என்று நான் நம்புகிறேன்.
இந்த அணுகுமுறையானது விவேக முதலீடுகளில் கவனம் செலுத்துவதன் மூலம் நில பிரீமியங்கள் வாயிலான வருமானத்தை மாநில அரசு நம்பியிருப்பதைக் குறைக்க வழிவகுக்கும்.
இது நிலையான வருவாயை வழங்கும். இந்த வருமானம் நீண்ட கால பொருளாதாரக் கொள்கைகள் மூலம் வழிநடத்த அனுமதிக்கும். அதே நேரத்தில் சிலாங்கூர் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது என்றார் அவர்
சிலாங்கூர் அரசாங்கம் எம்.பி.எஸ்.பி. வங்கி, ஏம்பேங்க் குழுமம், அலையன்ஸ் வங்கி ஆகிய மூன்று வங்கிகளில் ஒன்றில் முதலீடு செய்ய பரிசீலித்து வருவதாக
தி எட்ஜ் பத்திரிகை கூறியது.
இந்தத் திட்டம் சாத்தியமானால் சரவாக்கிற்குப் பிறகு நிதித் துறையில் நுழைந்த மாநிலமாக சிலாங்கூர் விளங்கும். கடந்த நவம்பரில் கிழக்கு மலேசியா மாநிலமான சரவாக் அஃபின் வங்கியில் 31.25 சதவீத பங்குகளை கொள்முதல் செய்ததன் மூலம் அதன் மிகப்பெரிய பங்குதாரராக மாறியது.


